லக்னோ : சிஎஸ்கே அணி தோல்வி அடையும் நேரங்களில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்ள ருதுராஜ் கெய்க்வாட் வராதது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சீசனில் துஷார் தேஷ்பாண்டே விளையாடிய முதல் சில போட்டிகளில் பெரிதாக சோபிக்கவில்லை. குறிப்பாக நோ-பால்களை வீசி தோனிக்கே அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் துஷார் தேஷ்பாண்டேவின் திறமையை அறிந்த தோனி, அவருக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் செய்தியாளர்கள் சந்திப்பை எதிர்கொள்ள அனுப்பி வைத்தார்.

இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் போது அணி வெற்றிபெற்றால் வேறு வீரரையும், தோல்வியடைந்தால் தோனியுமே செய்தியாளர்களை சந்திப்பார்கள். சிஎஸ்கே அணியிலும் அப்படிதான் தோனி செயல்பட்டு வந்தார். தற்போது சிஎஸ்கே அணி நிர்வாகத்தில் அந்த அணுகுமுறை தலைகீழாக மாறியுள்ளது.
சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட், அணி வெற்றிபெறும் போது நேரடியாக செய்தியாளர்களை சந்திக்கிறார். ஆனால் தோல்வியடையும் போது தலைமை பயிற்சியாளர் பிளெமிங்கையும் அனுப்பி வைக்கிறார். செய்தியாளர்களின் கேள்விகளை எதிர்கொள்ளவே சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் தயங்குவது ரசிகர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
வேறு எந்த அணியுடன் ஒப்பிட்டாலும் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் கொண்டு வரப்பட்ட முடிவுக்கு சென்னை அணி ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு அளித்தனர். அவரை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக தோனி, பிளெமிங், சிஇஓ காசி விஸ்வநாதன் மற்றும் முன்னாள் வீரர்களான ராயுடு, ரெய்னா உள்ளிட்டோரும் நம்பிக்கை வார்த்தைகள் கூறி வாழ்த்தினர்.
ஆனால் களத்தில் சிஎஸ்கே அணி வீரர்கள் இதுவரை முழுமையான போராட்டத்தை வெளிப்படுத்தவில்லை. ஒரு கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் முன்னின்று சவால்களை எதிர்கொள்ளாமல் நிதானம் காப்பது சரியா என்று கேள்வியும் எழுந்துள்ளது. அடுத்தடுத்து சிஎஸ்கே அணி விளையாடும் போட்டிகளில் ருதுராஜ் கெய்க்வாட் இப்படியான அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ரசிகர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.