லக்னோ : பவர் பிளே ஓவர்களில் விக்கெட் வீழ்த்த முடியாமல் தொடர்சி சொதப்புவதே தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளதாக சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்களை விளாசியது. தொடர்ந்து களமிறங்கிய லக்னோ அணி 19 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

லக்னோ அணி தரப்பில் கேப்டன் கேஎல் ராகுல் 53 பந்துகளில் 82 ரன்களும், டி காக் 54 ரன்களும் விளாசினர். இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வியடைந்ததன், இந்த சீசனில் 3வது தோல்வியை பதிவு செய்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வெளி மாநிலங்களில் விளையாடிய 4 போட்டிகளில் இது 3வது தோல்வியாகும். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.
இந்த தோல்வி குறித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேசுகையில், நாங்கள் பேட்டிங்கில் நன்றாக முடித்தோம். அந்த சூழலில் அதற்கு மேல் வேறு எதுவும் கேட்டிருக்க முடியாது. பவர் பிளேவுக்கு பின் கிடைத்த நல்ல தொடக்கத்தை பயன்படுத்த முடியவில்லை. தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறி கொடுத்தோம். நிச்சயம் 10 முதல் 15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். இந்த பிட்சில் இந்த இலக்கு கொஞ்சம் குறைவானது தான்.
ஏனென்றால் இம்பேக்ட் பிளேயர் விதிகள் இருப்பதால் நிச்சயம் ஒரு பிட்சில் 15 முதல் 20 ரன்கள் சேர்க்க வேண்டிய தேவையுள்ளது. இதுபோன்ற பிட்ச்களில் சிறிது நேரம் இருந்துவிட்டால், பின்னர் ஈரப்பதம் வந்துவிடும். அதன்பின் பேட்டிங்கில் நன்றாக ரன்களை குவிக்கலாம். அதனால் 190 ரன்கள் நிச்சயம் சரியான இலக்காக இருந்திருக்கும். பவர் பிளே ஓவர்களில் விக்கெட் வீழ்த்தும் பணிகளை சிஎஸ்கே அணி தொடர்ந்து செய்யாமல் தவறி வருகிறது.
அதில் முன்னேற்றம் அடைய வேண்டும். அதுதான் எதிரணியை அழுத்தத்தில் தள்ளுவதற்கு காரணமாக இருக்கும். லக்னோ அணிக்கு எதிரான அடுத்தப் போட்டியில் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவது மகிழ்ச்சி தான். நாங்கள் தவறுகளை சரி செய்து தயாராக வருவோம். 3 வெளி மைதான போட்டிகளுக்கு பின் அடுத்த சொந்த மண்ணில் விளையாட உள்ளது மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.