லக்னோ : சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற லக்னோ அணியின் பிளேயிங் லெவனில் முக்கிய மாற்றத்தை கேப்டன் கேஎல் ராகுல் கொண்டு வரவுள்ளது தெரிய வந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி விளையாடியுள்ள 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. அதேபோல் லக்னோ அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 3 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் நாளை மறுநாள் சிஎஸ்கே அணியை எதிர்த்து லக்னோ அணி களமிறங்கவுள்ளது.

டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு எதிராக லக்னோ அணி அடுத்தடுத்த போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளதால், வெற்றிப்பாதைக்கு திரும்ப தீவிரமாக உள்ளது. இதனால் சொந்த மண்ணில் நடக்கும் போட்டியில் சிஎஸ்கே அணியை வீழ்த்த லக்னோ அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் இளம் வேகப்பந்துவீச்சாளரான மயங்க் யாதவை மீண்டும் அணிக்குள் கொண்டு வர லக்னோ அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. குஜராத் அணிக்கு எதிரான போட்டியின் போது பவுலிங் செய்த மயங்க் யாதவ், திடீரென காயம் காரணமாக ஓய்வறைக்கு சென்றார். அதன்பின் பவுலிங் செய்ய வரவில்லை.
இதன்பின் மயங்க் யாதவிற்கு இடுப்பில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளதாக ஸ்கேன் பரிசோதனையில் தெரிய வந்தது. இதன்பின் கடந்த 2 போட்டிகளிலும் மயங்க் யாதவ் ஓய்வில் இருந்த நிலையில், லக்னோ சோசியல் மீடியா பக்கத்தில் மயங்க் யாதவ் பவுலிங் செய்யும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. மணிக்கு 156.7 கிமீ வேகத்தில் வீசக்கூடிய திறமை கொண்ட மயங்க் யாதவின் பவுலிங் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
2 போட்டிகளில் முழுமையாக விளையாடியுள்ள மயங்க் யாதவ், மொத்தமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றில் முதல் 2 போட்டிகளில் ஆட்டநாயகன் விருதை வென்ற முதல் வீரர் மயங்க் யாதவ் தான். சிஎஸ்கே அணிக்கு எதிராக மயங்க் யாதவ் கம்பேக் கொடுப்பது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.