சென்னை : ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் முஸ்தாஃபிசுர் ரஹ்மான் புதிதாக கற்றுக் கொள்ள ஒன்றுமில்லை என்று பிசிபி தலைவர் ஜலால் யூனுஸ் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 4 வெற்றி, 2 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணியின் பவுலிங் சுமாராக இருப்பதாக பார்க்கப்பட்ட நிலையில், பதிரானா மற்றும் முஸ்தாஃபிசுர் ரஹ்மான் இருவரின் எழுச்சி அந்த அணிக்கு மிகப்பெரிய பலனை கொடுத்துள்ளது.

ஒரு பக்கம் வேகத்தை கொண்டு பதிரானா மிரட்ட, இன்னொரு பக்கம் கட்டர்ஸ் மற்றும் ஸ்விங்கை கொண்டு முஸ்தஃபிசு ரஹ்மான் அசத்தி வருகிறார். இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள முஸ்தஃபிசுர் ரஹ்மான் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி பர்பிள் கேப் ரேசில் 4வது இடத்தில் இருக்கிறார். இவர் மே 1ஆம் தேதி வரை மட்டுமே ஐபிஎல் தொடரில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது.
மே 3ஆம் தேதி ஜிம்பாப்வே - வங்கதேசம் இடையிலான டி20 தொடர் நடக்கவுள்ளது. இதனிடையே ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவதை விடவும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடும் போது முஸ்தஃபிசுர் ரஹ்மான் கூடுதலாக கற்றுக் கொள்ள முடியும் என்று வங்கதேச முன்னாள் நிர்வாகிகள் கருத்து தெரிவித்தனர்.
இதுகுறித்து வங்கதேச கிரிக்கெட் சங்க தலைவர் ஜலால் யூனுஸ் பேசும் போது, மே 1ஆம் தேதி வரை முஸ்தஃபிசுர் ரஹ்மான் விளையாட அனுமதி அளித்துள்ளோம். மே 2ஆம் தேதியே அவர் நாடு திரும்ப வேண்டும். அதன்பின் மே 3ஆம் தேதி ஜிம்பாப்வே டி20 தொடரில் களமிறங்க தயாராக இருக்க வேண்டும். ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடி முஸ்தஃபிசுர் ரஹ்மான் புதிதாக கற்றுக் கொள்ள எதுவும் கிடையாது.
முஸ்தஃபிசுர் ரஹ்மான் கற்றுக் கொள்ளும் பருவம் முடிந்துவிட்டது. ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் மற்ற வீரர்கள் தான் அவரிடம் இருந்து கற்றுக் கொள்வதற்கு விஷயங்கள் இருக்கிறது. அவர் ஐபிஎல் விளையாடுவதால், வங்கதேசத்திற்கு எந்த பலனும் கிடையாது. எங்களை பொறுத்தவரை முஸ்தஃபிசுர் ரஹ்மானின் ஃபிட்னஸ் தான் கவலை. அவரின் 100 சதவிகித உழைப்பையும் ஐபிஎல் தொடரில் எடுத்துவிடுவார்கள்.
சிஎஸ்கே அணிக்கு முஸ்தஃபிசுர் ரஹ்மானின் ஃபிட்னஸ் பற்றி கவலையில்லை. ஆனால் எங்களுக்கு இருக்கிறார். முஸ்தஃபிசுரை மீண்டும் அழைப்பதற்கு ஜிம்பாப்வே டி20 தொடர் மட்டும் காரணமல்ல. அவர் இங்கு வரும் பட்சத்தில், அவருக்கான வேலைப்பளுவையும் எங்களால் திட்டமிட முடியும். ஐபிஎல் தொடரில் வேலைப்பளுவை பற்றி பேசுவதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார்.