பொளந்து கட்டிய க்ருனால் பாண்டியா, பூரன்.. பாவம் அந்த ஹர்சல் படேல்.. பஞ்சாப் அணிக்கு சவாலான இலக்கு!
லக்னோ : லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றிபெற 200 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 11வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து லக்னோ அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் காயம் காரணமாக கேஎல் ராகுல் இம்பேக்ட் பிளேயராகவும், லக்னோ அணியின் கேப்டனாக நிக்கோலஸ் பூரனும் களமிறங்கினர். இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்பின் கேஎல் ராகுல் - டி காக் கூட்டணி களமிறங்கியது. இவர்கள் இருவரும் முதல் 2 ஓவர்கள் அமைதி காத்த நிலையில், 3வது ஓவரில் இருந்து அதிரடிக்கு திரும்பினர்.

ரபாடா வீசிய 3வது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்து டி காக் அசத்த, அர்ஷ்தீப் சிங் வீசிய 4வது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்து அசத்தலாக தொடங்கினார். ஆனால் அந்த ஓவரிலேயே கேஎல் ராகுல் 15 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த தேவ்தத் படிக்கல் 9 ரன்களில் வெளியேறினார். இதனால் லக்னோ அணி பவர் பிளே ஓவர்கள் முடிவதற்குள் 45 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் டி காக் - ஸ்டாய்னிஸ் கூட்டணி இணைந்து சிறிது நேரம் நிதானமாக விளையாடியது.
இந்த நிலையில் சுழற்பந்துவீச்சாளர் ராகுல் சஹர் அட்டாக்கில் வந்தார். அவரது பந்தில் அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்கவிட்ட ஸ்டாய்னிஸ், 3வது சிக்சரை அடிக்கும் முயற்சியில் போல்டாகி வெளியேறினார். இதன்பின் டி காக் உடன் கேப்டன் பூரன் இணைந்து அதிரடியாக தொடங்கினார். 10 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 88 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், ராகுல் சஹர் வீசிய 12வது ஓவரில் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 20 ரன்கள் சேர்க்கப்பட்டது.
சிறப்பாக விளையாடிய டி காக் 34 பந்துகளில் அரைசதம் கடக்க, அடுத்த ஓவரிலேயே 54 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதனால் ஆட்டம் பூரனின் கைகளுக்கு வந்தது. பதோனியை ஒரு பக்கம் நிறுத்திவிட்டு, பூரன் அதிரடியில் பொளந்து கட்டினார். இதனால் 15 ஓவர்களில் லக்னோ அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்கள் சேர்த்தது. கடைசி வரை களத்தில் இருப்பார் என்று பார்க்கப்பட்ட பூரன் 21 பந்துகளில் 42 ரன்கள் எடுத்திருந்த போது, ரபாடா பவுலிங்கில் போல்டாகினார்.
இதனால் ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் கைகள் ஓங்கியது. ஆனால் லக்னோ அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் க்ருனால் பாண்டியா அதிரடியில் பொளந்து கட்டினார். ஹர்சல் படேல் வீசிய 18வது ஓவரில் மட்டும் 20 ரன்கள் சேர்க்கப்பட, 19 ஓவரில் 2 விக்கெட்டுகளை லக்னோ அணி இழந்தும் 9 ரன்களை சேர்த்தது. இதன்பின் கடைசி ஓவரை வீச ஹர்சல் படேல் வந்தார். அந்த ஓவரில் 8 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் லக்னோ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் சேர்த்து. சிறப்பாக விளையாடிய க்ருனால் பாண்டியா 22 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்து அசத்தினார்.


Click it and Unblock the Notifications