லக்னோ : 2024 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் அறிமுகம் செய்யப்பட்ட இளம் வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் தனது முதல் போட்டியிலேயே மின்னல் வேக பந்துவீச்சால் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். இவர் சுமாரான வேகத்தில் பந்து வீசினாலே 140 கிலோ மீட்டருக்கு மேல் தான் பந்து செல்கிறது.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் அதிகபட்சமாக 155.8 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலேயே அதிக வேகத்தில் பந்து வீசிய பந்துவீச்சாளர் என்ற சாதனையை செய்துள்ளார். மேலும், ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றிலும் இது ஐந்தாவது அதிக வேக பந்தாகும்.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய பஞ்சாப் அணி முதல் 70 பந்துகளில் 102 ரன்கள் சேர்த்து இருந்தது. விக்கெட் விழாமல் ஆடினால் கடைசி 7 - 8 ஓவர்களில் எளிதாக ரன் குவிக்கலாம் என அந்த அணி கணக்கு போட்டது.
ஆனால், 12 வது ஓவரை வீச அழைக்கப்பட்டார் மயங்க் யாதவ். அவர் அசாதாராணமாக 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசினார். அதிலும் பந்தை அவர் சரியாக கட்டுப்படுத்தி வீசினார். அதை எதிர்கொள்ள முடியாத பேர்ஸ்டோ விக்கெட்டை இழந்தார். அடுத்து பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் சர்மா ஆகியோரும் அவரது அதிவேக பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். இதை அடுத்து பஞ்சாப் அணி தோல்வி அடைந்தது. மயங்க் யாதவ் 155.8 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவானை மிரள வைத்தார். லக்னோ அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மயங்க் யாதவ் தனி ஆளாக தனது முதல் ஐபிஎல் போட்டியிலேயே எதிரணியை வீழ்த்தி இருக்கிறார். அது மட்டுமின்றி இந்தியாவிலேயே உம்ரான் மாலிக்கிற்கு பின் அதிவேகத்தில் பந்து வீசி இருக்கிறார். அதே சமயம். அவரை விட பந்தை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்படுகிறார். இதை அடுத்து 21 வயதே ஆகும் மயங்க் யாதவுக்கு இந்திய அணியில் இடம் கொடுக்க வேண்டும் என்ற குரல்கள் எழத் துவங்கி விட்டன. இவர் தான் அடுத்த பும்ரா என பலரும் சிலாகித்து வருகின்றனர். எனினும், அவர் முதல் ஐபிஎல் போட்டியில் மட்டுமே ஆடி இருக்கிறார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முடிவில் மயங்க் யாதவ் அதிக விக்கெட் வீழ்த்தி இருந்தால் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கக் கூடும்.