மும்பை : 42 வயது இளைஞரான தோனியும், எங்கள் அணியின் மலிங்காவும் தான் வெற்றிக்கு காரணம் என்று சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், சிவம் துபே மற்றும் தோனி ஆகியோரின் அதிரடியான ஆட்டம் காரணமாக 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்களை சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய மும்பை அணி 186 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

குறிப்பாக சீனியர் வீரரான ரோகித் சர்மா 20 ஓவர்கள் களத்தில் பேட்டிங் செய்து சதமடித்த போதும் மும்பை அணியால் வெற்றிபெற முடியவில்லை. இவரை களத்தில் வைத்து கொண்டே சிஎஸ்கே அணி மும்பை அணியின் கோட்டையான வான்கடே மைதானத்தில் வென்றது சிஎஸ்கே ரசிகர்கள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வெற்றி குறித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேசுகையில், எங்கள் அணியின் இளம் விக்கெட் கீப்பர் கடைசி ஓவரில் களமிறங்கி 3 சிக்ஸ் விளாசியது சிஎஸ்கே வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதுதான் இரு அணிகளுக்கும் இடையிலான வித்தியாசம். வான்கடே போன்ற பேட்டிங்கிற்கு சாதகமான மைதானங்களில் எப்போதும் 10 முதல் 15 ரன்கள் கூடுதலாக சேர்க்க வேண்டும்.
நாங்கள் பேட்டிங் செய்த போது, மிடில் ஓவர்களில் பும்ரா மிகச்சிறப்பாக பவுலிங் செய்தார். அதேபோல் சிஎஸ்கே பவுலர்களின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தது. மும்பை பேட்ஸ்மேன்கள் சில சிறப்பான ஷாட்கள் விளையாடிய போதும், எங்களால் சிறப்பாக செயல்பட முடிந்தது. இதுபோன்ற பிட்சில் 6 ஓவர்களில் 60 ரன்கள் என்று கொடுத்தால், நிச்சயம் கண்ணை மூடிக் கொண்டு எடுத்து கொள்வேன். எங்கள் பவுலர்கள் அவர்களை கட்டுப்படுத்தினார்கள் என்றே சொல்ல வேண்டும்.
எங்களின் மலிங்கா இன்று மிகச்சிறப்பாக பவுலிங் செய்தார். அதில் அவரின் யார்க்கர்கள் துல்லியமாக இருந்தது. துஷார் தேஷ்பாண்டே மற்றும் ஷர்துல் தாக்கூரையும் மறக்க கூடாது. எங்களின் திட்டங்களை எளிமையாகவும், அனைவரையும் தட்டிக் கொடுத்தும் விளையாடுகிறோம். ரஹானேவுக்கு கொஞ்சம் பிடிப்பு இருந்தது. அதனால் அவர் தொடக்கம் கொடுத்தால் சரியாக இருக்கும் என்று நினைத்தோம். நான் எந்த இடத்திலும் பேட்டிங் செய்ய தயாராக உள்ளேன். கேப்டனாக அது கூடுதல் பொறுப்பு என்றே நினைப்பதாக தெரிவித்துள்ளார்.