மும்பை : மும்பை அணிக்கு எதிரான போட்டியில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 5 வீரர்களையும் சிஎஸ்கே அணி பிளேயிங் லெவனில் கொண்டு வந்துள்ளது.
ஒவ்வொரு ஐபிஎல் சீசனிலும் சாம்பியன் அணிகளான மும்பை மற்றும் சிஎஸ்கே இடையிலான ஆட்டம் அதிகமாக எதிர்பார்க்கப்படும். அதேபோல் சிஎஸ்கே அணிக்கு எதிராக மும்பை அணியும், மும்பை அணிக்கு எதிராக சிஎஸ்கே அணியும் ஆக்ரோஷமாக விளையாடுவார்கள். வெற்றி, தோல்வியை கடந்து கடைசி வரை போராடுவார்கள்.

இதன் காரணமாக ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே - மும்பை இடையிலான ஆட்டம் எல்-கிளாசிக்கோ என்று கொண்டாடப்படும். இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று, பவுலிங் செய்வதாக அறிவித்தார். இதற்கு இரண்டாவது பவுலிங்கின் போது மைதானத்தில் ஏற்படும் ஈரப்பதமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இந்த நிலையில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் வெல்வதற்காக சிஎஸ்கே அணி புதிய திட்டத்துடன் களமிறங்கியுள்ளது. வான்கடே மைதானத்தில் விளையாடிய அனுபவம் கொண்ட வீரர்களும், மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த வீரர்களுக்கும் வாய்ப்பளித்து சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன் அமைந்துள்ளது.
சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் தான். அதேபோல் சிஎஸ்கே அணியின் ரஹானே, சிவம் துபே, துஷார் தேஷ்பாண்டே, ஷர்துல் தாக்கூர் ஆகிய வீரர்களுக்கு வான்கடே மைதானம் தான் சொந்த மைதானமாகும். ரஞ்சி டிராபி தொடரில் மும்பை அணிக்காக இதே மைதானத்தில் தான் களமிறங்கி வந்துள்ளனர்.
இதனால் வான்கடே மைதானத்தில் தன்மையை அறிந்து இவர்களால் செயல்பட முடியும் என்று பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே ரஹானேவை தொடக்க வீரராக சிஎஸ்கே அணி களமிறக்கியதாகவும் பார்க்கப்படுகிறது. இதனால் இந்த போட்டியில் சிஎஸ்கே அணியின் செயல்பாடுகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.