மும்பை : மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பதிரானாவை கடந்து மற்ற அனைத்து பவுலர்களும் வேகத்தை குறைத்து பவுலிங் செய்ய முடிவெடுத்ததாக சிஎஸ்கே அணியின் ஷர்துல் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி அபார வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு சிஎஸ்கே அணியின் பவுலர்கள் முக்கிய காரணமாக அமைந்தனர். ஏனென்றால் வான்கடே போன்ற பேட்ஸ்மேன்களின் சொர்க்கமான பிட்சில் துஷார் தேஷ்பாண்டே 4 ஓவர்களில் 29 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்தார்.

அதேபோல் ஷர்துல் தாக்கூர் 4 ஓவர்களில் 35 ரன்கள் கொடுத்துள்ளார். அதேபோல் பதிரானா 4 ஓவர்களில் 28 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா 4 ஓவர்களில் 37 ரன்களையும் விட்டுக் கொடுத்துள்ளார். குறிப்பாக துஷார் தேஷ்பாண்டே மற்றும் ஷர்துல் தாக்கூர் இருவரும் 15 மற்றும் 16 ஆகிய ஓவர்களில் வெறும் 5 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தனர்.
இதுகுறித்து சிஎஸ்கே அணியின் ஷர்துல் தாக்கூர் பேசுகையில், இந்த போட்டியில் வெற்றிபெற்றதில் மகிழ்ச்சி. வான்கடே மைதானத்தில் மும்பைக்கு எதிராக வெல்வது எளிதல்ல. மும்பை - சிஎஸ்கே ஆட்டம் எப்போதும் தரமானதாக இருக்கும். ரோகித் சர்மா, ருதுராஜ் கெய்க்வாட், சிவம் துபே ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்தனர். சிஎஸ்கே அணி வீரர்கள் அழுத்தத்தை சிறப்பாக கையாண்டதால் வெற்றிபெற்றுள்ளோம்.
நாங்கள் பவுலிங்கிற்கு ஏற்றவாறு ஃபீல்டர்களை நிற்க வைத்தோம். பேட்ஸ்மேன்களை விடவும் கொஞ்சம் ஸ்மார்ட்டாக செயல்பட வேண்டியிருந்தது. இது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பிட்ச். எப்போதெல்லாம் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பிட்சில் விளையாடினால், ஸ்லோயராக பந்துகள் எடுபடும். பதிரானாவை தவிர்த்து மற்ற அனைத்து பவுலர்களும் வேகத்தை கைவிடலாம் என்று முடிவு செய்தோம்.
பதிரானா மறுபக்கத்தில் இருந்து மிகச்சிறப்பாக யார்க்கர்களை வீசினார். வான்கடே மைதானத்தில் டிஃபெண்டிங் செய்வது எளிதல்ல. ரோகித் சர்மா பேட்டிங் செய்யும் போது, ஆட்டம் மும்பை அணி பக்கம் சாய்வதாக பார்க்கப்பட்டது. அதன்பின் ரோகித் சர்மாவுக்கு பவுலிங் செய்யும் போது தைரியமாக பவுண்டரி தூரம் அதிகமிருக்கும் பக்கம் அடிக்கட்டும் என்று செயல்பட்டேன். அதையும் கடந்து பவுண்டரி அடித்தால் ஒன்னும் சொல்ல முடியாது. ஒருவேளை அவர் மிஸ் செய்தால், ஆட்டம் எங்கள் பக்கம் மாறும் என்று புரிந்ததாக தெரிவித்துள்ளார்.