மும்பை : சிஎஸ்கே அணியை விடவும் மும்பை அணி தான் பலம் வாய்ந்து காணப்படுவதாக முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.
சிஎஸ்கே - மும்பை அணிகளுக்கு இடையிலான எல்-கிளாசிக்கோ ஆட்டம் இன்று இரவு நடக்கிறது. இரு அணிகளும் தலா 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள நிலையில், இந்த சீசனில் இவர்களுக்கு இடையிலான ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் சிஎஸ்கே அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் மும்பை அணிக்கு ஹர்திக் பாண்டியா இருவரும் புதிய கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் ரைவல்ரி அணிக்கு எதிராக யார் முதல் அடியை கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த சீசனில் மும்பை அணி 5 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்வியுடனும், சிஎஸ்கே அணி 5 போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல்விகளுடன் உள்ளது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணியால் பிளே ஆஃப் ரேஸில் முன்னிலை பெற முடியும்.
இந்த நிலையில் சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளை ஒப்பிட்டு முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து பேசுகையில், மும்பை இந்தியன்ஸ் அணி தான் பலமாக தெரிகிறது. மும்பை அணியின் வீரர்கள் அனைவருமே சிஎஸ்கே அணிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வல்லமை கொண்டவர்கள். அதேபோல் மும்பை அணியின் பவுலிங்கும் பலம் பெற்றுள்ளது. கொஞ்சம் நல்ல வேகத்தில் வீசக் கூடியவர்களாக இருக்கின்றனர்.
இந்த சீசனில் வான்கடே மைதானம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு தான் சாதகமாக இருந்துள்ளது. பேட்டிங் வரிசையிலும் பவர் ஹிட்டர்கள் நிறைந்து இருக்கின்றனர். இருந்தாலும் டாஸ் தான் வெற்றி, தோல்வியில் முக்கியப் பங்கு வகிக்கும். நிச்சயம் டாஸ் வெல்லும் அணி சேஸிங்கை தான் தேர்வு செய்யும். ஏனென்றால் வான்கடே மைதானத்தில் எவ்வளவு பெரிய இலக்கையும் சேஸ் செய்ய முடியும்.
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 200 ரன்களை எளிதாக 15.3 ஓவர்களில் மும்பை அணி சேஸிங் செய்ததை மறக்க கூடாது. குறிப்பாக சூர்யகுமார் யாதவ் தான் அபாயகரமான வீரராக இருப்பார். ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தை போல் மீண்டும் விளையாட வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் மும்பை அணியும் தோனியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவரின் திட்டங்கள் சரியாக செயல்பட்டால், ஆட்டமே மாறிவிடும் என்று தெரிவித்துள்ளார்.