MI vs CSK : மீண்டும் டாஸ் தோற்ற ருதுராஜ்.. மும்பைக்கு கிடைத்த சாதகம்.. சிஎஸ்கே அணியில் ஒரு மாற்றம்!
மும்பை : சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 29வது லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி களமிறங்கியுள்ளது. வான்கடே மைதானத்தில் நடக்கும் போட்டி என்பதால், இரு அணிகளின் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேபோல் இரு அணிகளும் புதிய கேப்டனுக்கு கீழ் களமிறங்கியுள்ளனர். இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

வான்கடே மைதானம் சேஸிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மும்பை அணியில் கடந்த போட்டியில் ஆடிய அதே அணியே களமிறங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிஎஸ்கே அணி தரப்பில் தீக்சனாவுக்கு பதிலாக பதிரானா பிளேயிங் லெவனில் கொண்டு வரப்பட்டுள்ளார்.
6வது போட்டியில் கேப்டனாக களமிறங்கியுள்ள ருதுராஜ் கெய்க்வாட் 5வது முறையாக டாஸை இழந்துள்ளார். இதன்பின் ஹர்திக் பாண்டியா பேசுகையில், நாங்கள் பவுலிங் செய்ய விரும்புகிறோம். ஏனென்றால் மைதானத்தில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். கடந்த போட்டியை விடவும் இந்த பிட்ச் இன்னும் நன்றாக உள்ளது. அடிப்படைகளை சரியாக செய்ய வேண்டும். அடுத்தடுத்து எங்களால் 2 போட்டிகளில் வெற்றிபெற முடிந்துள்ளது.
அதுதான் ஐபிஎல் தொடரில் சுவாரஸ்யம். அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் பங்களித்தால் மட்டுமே வெற்றிபெற முடியும். அப்படி செய்தால் எளிதாக ஒரு அணியால் வெற்றிபெற முடியும். கடந்த போட்டியில் முதல் பேட்டிங்கில் 10 ஓவர்கள் முடிவடைந்த போதே ஈரப்பதம் வரத் தொடங்கியது என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ருதுராஜ் கெய்க்வாட் பேசுகையில், நாங்களும் பவுலிங்கை தான் செய்ய விரும்பினோம். ஆனால் டாஸ் நமது கையில் இல்லை. பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என்று மூன்று துறைகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டும். இரு அணிகளுக்கும் இது முக்கியமான போட்டியாக உள்ளது. எந்த அணி சிறப்பாக விளையாடுகிறதோ, அவர்கள் வெற்றிபெறுவார்கள். தீக்சனாவுக்கு பதிலாக பதிரானா கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Story first published: Sunday, April 14, 2024, 19:23 [IST]
Other articles published on Apr 14, 2024


Click it and Unblock the Notifications