மும்பை : மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் பதிரானா ஒட்டுமொத்த ஆட்டத்தை திருப்பியுள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய ருதுராஜ் கெய்க்வாட் 69 ரன்களும், சிவம் துபே 66 ரன்களும் விளாசினர். அதேபோல் கடைசி நேரத்தில் களமிறங்கிய தோனி 4 பந்துகளில் 20 ரன்களை விளாசி அசத்தினார்.

இதன்பின் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 63 பந்துகளில் 5 சிக்ஸ், 11 ஃபோர்ஸ் உட்பட 105 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். சிஎஸ்கே அணி தரப்பில் இளம் வீரர் பதிரானா 4 ஓவர்களில் 28 ரன்கள் விட்டுக் கொடுத்து 12 டாட் பால்கள் உட்பட 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சிஎஸ்கே அணிக்கு எப்போதெல்லாம் விக்கெட்டின் தேவை எழுந்ததோ, அப்போது அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். அதேபோல் மும்பை அணி வலிமையாக இருந்த போது, ஒரே ஓவரில் இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரையும் வீழ்த்தினார். தொடர்ந்து அபாயகரமாக ஆடிய திலக் வர்மா மற்றும் ஷெப்பர்ட் ஆகியோரையும் வீழ்த்தி அசத்தினார்.
சிஎஸ்கே அணி அளவிற்கு வேறு எந்த அணியும் மும்பை அணிக்காக ஆடிய மலிங்காவால் பாதிக்கப்பட்டதில்லை. குறிப்பாக 2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியின் கடைசி பந்தில் மலிங்கா மும்பை அணிக்கு வென்று கொடுத்தார். இதன் காரணமாகவே சிஎஸ்கே அணி மலிங்காவை போன்ற ஒரு பவுலரை தொடர்ச்சியாக தேடி வந்தது.
இதன்பின் 2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது பதிரானா பவுலிங் செய்யும் வீடியோ தோனிக்கு கொண்டு வரப்பட, உடனடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். பதிரானாவின் திறமையை கண்டறிந்த தோனி, ஒவ்வொரு போட்டியிலும் தனது மகனை போல் பாதுகாத்தார். பதிரானாவுக்காக நடுவர்களுடன் மோதியது, பதிரானாவுக்காக ஜோஷ் லிட்டிலை கழற்றிவிட்டது என்று தோனி ஏராளமான விஷயங்களை செய்துள்ளார்.
அதேபோல் பதிரானாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து நம்பிக்கை கொடுத்திருக்கிறார். வேறு எந்த இளம் வீரர்களையும் தோனி இந்தளவிற்கு பாதுகாத்து வந்ததில்லை. தற்போது தோனி பாதுகாத்து வந்ததற்கான பலனாக சிஎஸ்கே அணிக்காக பதிரானா ஒவ்வொரு போட்டியிலும் சம்பவங்களை செய்து வருகிறார். அதன் உச்சமாக வான்கடே மைதானத்தில் வைத்து மும்பை அணிக்கு மலிங்காவின் ஜூனியரை வைத்து வீழ்த்தி அசத்தியுள்ளார்.