மும்பை : ஐபிஎல் வரலாற்றிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அதிக முறை தோற்கடித்த ஒரே அணி மும்பை இந்தியன்ஸ் மட்டுமே. அதே சமயம் சிஎஸ்கே அணியும் ஈடு கொடுத்து வெற்றிகளை பெற்றுள்ளது. அதனால், வெற்றி - தோல்விகளில் பெரிய வித்தியாசம் இல்லை.
ஆனாலும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு, சிஎஸ்கே என்றாலே ஒரு வெறியுடன் ஆடுவதை கடந்த காலங்களில் பார்த்து இருக்கலாம். அதற்கு என்ன காரணம்?

2008இல் ஐபிஎல் தொடர் துவங்கியது முதல் ஐந்து ஆண்டுகள் வரை மும்பை இந்தியன்ஸ் அணியால் மூன்று முறை மட்டுமே பிளே-ஆஃப் செல்ல முடிந்தது. அதிலும் ஒரு முறை மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேற முடிந்தது. ஆனால், இதே கால கட்டத்தில் சிஎஸ்கே அணி ஐந்து முறை ஐபிஎல் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறி இருந்தது.
மேலும், இரண்டு முறை ஐபிஎல் கோப்பை வென்று விட்டது. அதிலும் 2010இல் சிஎஸ்கே அணி தனது முதல் ஐபிஎல் கோப்பையை மும்பை இந்தியன்ஸ் அணியை இறுதிப் போட்டியில் வீழ்த்தி வென்று இருந்தது. அப்போது முதலே மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்துக்கு சிஎஸ்கே அணி மீது ஒரு வித போட்டி மனப்பான்மை எழுந்தது.
அப்போது முதலே சிஎஸ்கே அணியை வீழ்த்துவது என்பது மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய பணியாக மாறியது. இன்னும் சொல்லப் போனால் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பை வெல்லாவிட்டாலும் சிஎஸ்கே அணியை லீக் சுற்றில் இரண்டு முறை வீழ்த்தினால் போதும் என அந்த அணியின் ரசிகர்கள் சொல்லி வந்தனர்.
இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய 36 போட்டிகளில் மும்பை அணி 20 வெற்றிகளையும், சிஎஸ்கே அணி 16 வெற்றிகளையும் பெற்றுள்ளன. இந்த வித்தியாசம் பெரிது இல்லை என்றாலும், ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியை அதிக முறை வீழ்த்திய அணி என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் அணி தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் - சிஎஸ்கே அணிகள் லீக் சுற்றில் மோத உள்ளன. இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெறுமா? என அந்த அணியின் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.