மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் - டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியை காண 20,000 பள்ளிக் குழந்தைகள் மும்பை இந்தியன்ஸ் உடையை அணிந்து அந்த அணியின் ரசிகர்களாக பங்கேற்றனர். அவர்கள் மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் நீதா அம்பானியின் சார்பில் அழைத்து வரப்பட்டனர்.
இதை அடுத்து ஹர்திக் பாண்டியாவிற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு இருப்பதால் அதை தவிர்க்கவே குழந்தைகளை அழைத்து வந்து இருக்கின்றனர் என்ற விமர்சனம் எழுந்தது. ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவு அளிக்கவே அவர்கள் அழைத்து வரப்பட்டு இருப்பதாக ரோஹித் சர்மா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை கூறி வருகின்றனர். ஆனால் உண்மை வேறு.

"அனைவருக்கும் கல்வி மற்றும் விளையாட்டு" என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் மும்பை இந்தியன்ஸ் அணி ஆடும் ஒரு போட்டியை காண ஆயிரக்கணக்கில் பள்ளிக் குழந்தைகள் அம்பானி குழும நிறுவனங்களின் சார்பில் அழைத்து வரப்படுகின்றனர். மேலும், ஐபிஎல் டிக்கெட்கள் விற்கும் முன்பே குழந்தைகளை எந்தப் போட்டிக்கு அழைத்து வருவது என்பதை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் முடிவு செய்து விடும்.
எனவே, மும்பை அணியின் முதல் மூன்று போட்டிகளில் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிர்ப்பு இருந்ததால் நான்காவது போட்டியில் பள்ளிக் குழந்தைகளை அழைத்து வந்ததாக கூறுவதும் தவறான கருத்தாகும். அதே சமயம், இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியாவுக்கு மைதானத்தில் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பாது என்பதும் உண்மையே. சுமார் 33000 ரசிகர்கள் அமரக் கூடிய வான்கடே மைதானத்தில் 20000 குழந்தைகள் மும்பை இந்தியன்ஸ் அணியை ஆதரித்து அமர்ந்து இருப்பதால் ஹர்திக் பாண்டியா நிம்மதியாக இந்தப் போட்டியில் பங்கேற்க முடியும்.
முந்தைய போட்டிகளில் ஹர்திக் பாண்டியா செய்த ஒவ்வொரு தவறுக்கும் ரசிகர்கள் கடுமையாக கோஷம் எழுப்பி அவரை அழுத்தத்தில் ஆழ்த்தினர். எனவே, ஹர்திக் பாண்டியாவுக்கு டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டி பெரிய மாற்றமாக அமைந்தது.