மும்பை : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா 33 பந்துகளில் 39 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்று வருகிறது.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி மரண மாஸ் கம்பேக்கை கொடுத்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 234 ரன்கள் குவித்துள்ளது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 27 பந்துகளில் 49 ரன்களையும், டிம் டேவிட் 21 பந்துகளில் 45 ரன்களையும் விளாசியுள்ளனர்.

அதேபோல் இஷான் கிஷன் 23 பந்துகளில் 42 ரன்களும், கடைசி நேரத்தில் களமிறங்கிய ரொமாரியோ ஷெப்பர்ட் 10 பந்துகளில் 4 சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 39 ரன்களையும் விளாசிளார். ஒரு வீரர் கூட அரைசதம் அடிக்காத சூழலிலும், மும்பை அணியின் 234 ரன்களை குவித்துள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மட்டுமே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் 33 பந்துகளில் ஒரு சிக்ஸ், 3 பவுண்டரி உட்பட 39 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். குறிப்பாக அவரின் ஸ்ட்ரைக் ரேட் 118.18ஆக உள்ளது. இதுதான் ரசிகர்களிடையே விமர்சனங்களை பெற்றுள்ளது. ஏனென்றால் மும்பை அணி 11 ஓவர்களில் 110 ரன்களை கடந்து விளையாடி கொண்டிருந்தது.
அப்போது 4வது பேட்ஸ்மேனாக களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 20 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்து விளையாடி கொண்டிருந்தார். இதனால் ஒரு கட்டத்தில் மும்பை அணி 200 ரன்களை எட்டுமா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்தது. ஏற்கனவே ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 278 ரன்கள் இலக்கை விரட்ட மும்பை அணி வீரர்கள் தீவிரமாக இருந்தனர்.
அப்போது களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 20 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்றது. தற்போது மீண்டும் ஒருநாள் போட்டியை போன்ற இன்னிங்ஸை ஹர்திக் பாண்டியா ஆடியுள்ளார். இதனால் மும்பை அணியின் கேப்டன்சி பிரஷர் ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங்கிற்கு பிரச்சனையாக அமைந்துள்ளதாக விவாதம் எழுந்துள்ளது.