மும்பை : 2024 ஐபிஎல் தொடரில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்த மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 234 ரன்கள் குவித்து டெல்லி கேபிடல்ஸ் அணியை கதிகலங்க வைத்தது. இந்தப் போட்டியில் மும்பை அணி இத்தனை பெரிய ஸ்கோர் குவிக்க முக்கிய காரணமாக இருந்தது வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரொமாரியோ ஷெப்பர்ட் தான்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணிக்கு ரோஹித் சர்மா 27 பந்துகளில் 49 ரன்கள் குவித்தும், இஷான் கிஷன் 23 பந்துகளில் 42 ரன்கள் குவித்தும் அதிரடி துவக்கம் அளித்தனர். சூர்யகுமார் யாதவ் டக் அவுட் ஆனார். கேப்டன் ஹர்திக் பாண்டியா 33 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து குறைந்த ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடி ஏமாற்றம் அளித்தார். அதனால் மும்பை அணி பெரிய ஸ்கோர் குவிக்கும் வாய்ப்பை நழுவ விட்டதாக பலரும் நினைத்த நிலையில் டிம் டேவிட் அதிரடியாக ஆடி மும்பை அணி 19 ஓவர்களில் 202 ரன்கள் எட்டச் செய்தார்.

அடுத்து கடைசி ஓவரில் ரொமாரியோ ஷெப்பர்ட் ஸ்ட்ரைக்கில் நின்றார். அவர் கடைசி ஓவரில் நான்கு சிக்ஸ், இரண்டு ஃபோர் அடித்து தெறிக்க விட்டார். அந்த ஓவரில் மட்டும் 32 ரன்கள் சேர்த்தது மும்பை இந்தியன்ஸ் அணி. ஒட்டுமொத்த ஸ்கோர் 234 ஆக உயர்ந்தது. 200 ரன்களே நல்ல ஸ்கோர் எனும் நிலையில் 234 ரன்கள் குவித்ததால் வெற்றி எளிது என்ற குஷியில் இருந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா, ரொமாரியோ ஷெப்பர்ட் வீரர்கள் அறைக்கு திரும்பிய போது துள்ளிக் குதித்து, கட்டி அணைத்து அவரை வரவேற்றார். அந்த காட்சிகள் இணையத்தில் மும்பை அணி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டது. கடந்த மூன்று போட்டிகளின் தோல்வியால் மும்பை அணியின் புதிய கேப்டன் பாண்டியா துவண்டு போயிருந்தார். ரசிகர்கள் மத்தியிலும் அவருக்கு எதிர்ப்பு இருந்தது. இந்த நிலையில், வெற்றியை உறுதி செய்து தன் சோகத்தை போக்கிய ரொமாரியோவை கட்டி அனைத்து இருக்கிறார் பாண்டியா.
மும்பை அணி 234 ரன்கள் குவித்த நிலையில் அடுத்து ஆடிய டெல்லி கேபிடல்ஸ் அணி ரன் குவிக்க போராடிய போதும் இலக்கை எட்ட முடியாமல் தோல்வி அடைந்தது. டெல்லி அணியின் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 25 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார். எனினும், அந்த அணி 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. 29 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி 2024 ஐபிஎல் தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.