மும்பை : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரின் 20வது லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து டெல்லி அணி களமிறங்கியுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 234 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 49 ரன்களும், டிம் டேவிட் 45 ரன்களும், இஷான் கிஷன் 42 ரன்களும், ரொமாரியோ ஷெப்பர்ட் 10 பந்தில் 39 ரன்களும் விளாசினர்.

இதனையடுத்து 235 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய டெல்லி அணிக்கு பிரித்வி ஷா - டேவிட் வார்னர் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. மும்பை அணி தரப்பில் கோட்ஸி முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரின் 2வது பந்திலேயே சிக்ஸ் அடித்து பிரித்வி ஷா அதிரடியாக தொடங்கினார். இருந்தாலும் பும்ராவின் அசத்தலான 2வது ஓவர் காரணமாக டெல்லி அணி நிதானமாக ரன்கள் சேர்த்தது. 3 ஓவர்களில் 15 ரன்கள் சேர்த்த நிலையில், ஆகாஷ் மத்வால் பந்தில் வார்னர் அசத்தலாக ஒரு சிக்ஸ் அடித்தார்.
அவரை அட்டாக் செய்த நினைத்த வார்னர், அடுத்த பந்திலேயே 10 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதன்பின் ரிஷப் பண்ட் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இளம் வீரர் அபிஷேக் போரல் களமிறக்கப்பட்டார். இதன்பின் பிரித்வி ஷா அதிரடியில் பொளந்து கட்டினார். ஓவருக்கு 2 பவுண்டரிகளை விளாசிய பிரித்வி ஷாவால், டெல்லி அணி 6 ஓவர்களில் 46 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து பியூஷ் சாவ்லா வீசிய 8வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உட்பட 16 ரன்கள் சேர்க்கப்பட்டது.
பின்னர் கோட்ஸி வீசிய 9வது ஓவரில் 15 ரன்கள் சேர்க்கப்பட, பிரித்வி ஷா 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். இதனால் டெல்லி அணி 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் சேர்த்தது. ஆட்டத்தில் டெல்லி அணி கைகள் ஓங்குவதை உணர்ந்த ஹர்திக் பாண்டியா உடனடியாக பும்ராவை அட்டாக்கில் கொண்டு வந்தார். அந்த ஓவரில் பும்ரா வீசிய அற்புதமான யார்க்கரால் பிரித்வி ஷா 40 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
தொடர்ந்து வந்த ஸ்டப்ஸ் களமிறங்கிய உடனே அதிரடியாக 2 சிக்சர்களை பறக்கவிட்டார். இதன்பின் அபிஷேக் போரல் 31 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கேப்டன் ரிஷப் பண்ட் களமிறங்கினார். ஆனால் கோட்ஸி வீசிய பந்தில் அவர் 1 ரன்னில் ஆட்டமிழக்க, கடைசி 24 பந்துகளில் டெல்லி அணி வெற்றிக்கு 82 ரன்கள் தேவையாக இருந்தது. இந்த நிலையில் 17வது ஓவரை வீசிய ஆகாஷ் மத்வால் பவுலிங்கில் 19 ரன்கள் விளாசப்பட்டது. இதனிடையே சிறப்பாக ஆடிய ஸ்டப்ஸ் 19 பந்துகளில் அரைசதத்தை எட்டினார்.
பின்னர் டெல்லி அணியின் வெற்றிக்கு கடைசி 2 ஓவரில் 55 ரன்கள் தேவையாக இருந்தது. 19வது ஓவரை வீச ரொமாரியோ ஷெப்பர்ட் அழைக்கப்பட்டார். அந்த ஓவரில் 3 சிக்ஸ் உட்பட 21 ரன்கள் விளாசப்பட்டது. இதனால் கடைசி ஓவரில் டெல்லி வெற்றிக்கு 34 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீச கோட்ஸி வந்தார்.
இதில் முதல் பந்திலேயே 2 ரன்கள் சேர்க்கப்பட, மும்பை அணியின் வெற்றி உறுதியானது. கடைசி ஓவரில் 3 விக்கெட்டுகள் உட்பட 4 ரன்களே சேர்க்கப்பட்டது. இதனால் டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. இதனால் மும்பை அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. சிறப்பாக ஆடிய ஸ்டப்ஸ் 25 பந்துகளில் 71 ரன்களை விளாசினார்.