மும்பை :ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடப்பு சீசனில் அனைவரின் கண்களும் மும்பை இந்தியன்ஸ் அணி மீது தான் இருந்தது. காரணம் நாங்கள் எல்லாம் ஒரே குடும்பம் என்று விளம்பரப்படுத்தி வந்த மும்பை இந்தியன்ஸ் அணியில் இந்த ஆண்டு யார் கண் பட்டதோ ஒற்றுமை கொஞ்சம் கூட இல்லாமல் லியோ தாஸ் குடும்பம் போல் மாறிவிட்டது.
கேப்டன் ஆக ரோகித் சர்மா நீக்கப்பட்டு அந்த இடத்தில் குஜராத் அணியிலிருந்து கொண்டுவரப்பட்ட ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார். இதன் காரணமாக மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டாக பிளவு பட்டது.

சூரியகுமார், பும்ரா போன்ற வீரர்கள் ரோகித் சர்மாவுக்கு ஆதரவாகவும் இஷான் கிஷன் போன்ற வீரர்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவாகவும் நின்றார்கள். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் பல பிரச்சனைகள் நிகழும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ரோகித் சர்மாவை சமாதானப்படுத்த அம்பானி குடும்பம் பல முயற்சிகள் எடுத்தது.
இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி பயிற்சி முகாம் தொடங்கி ஒரு வாரத்திற்கு பின்பு தான் ரோகித் சர்மா வந்து சேர்ந்தார். அப்போது ஹர்திக் பாண்டியா அவரை வரவேற்ற நெகிழ்ச்சி காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலானது. எனினும் கேப்டனாக களத்தில் ஹர்திக் பாண்டியா எப்படி நடந்து கொள்ளப் போகிறார்? ரோகித் சர்மா அவருக்கு கீழ் எப்படி விளையாட போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியி) இருந்து.
இந்த நிலையில் குஜராத் அணிக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி டாஸை இழந்து பந்து வீச பணிக்கப்பட்டது. அகமதாபாத் ஆடுகளத்தில் எப்போதுமே பொளந்து எடுத்து விடுவார். அதிக ரன்களை இந்த மைதானத்தில் அவர் எடுத்திருக்கிறார். இதனால் கில்லின் விக்கெட்டை எவ்வளவு விரைவாக வீழ்த்தினால் மட்டுமே வெற்றி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிடைக்கும் என்ற நிலை இருந்தது.
இந்த நிலையில் சுப்மான் கில் 22 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்தார். இதில் மூன்று பவுண்டர்களும் ஒரு சிக்ஸரும் அடங்கும். அப்போது சாவ்லா, வீசிய பந்தில் கில் அடித்த கேச்சை முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா அபாரமாக பிடித்தார். இதனை அடுத்து அங்கிருந்து வந்த ஹர்திக் பாண்டியா ரோகித் சர்மாவை கட்டி அணைக்க முயன்ற போது ரோகித் சர்மாவும் அவரை கட்டி அணைத்து தன்னுடைய மகிழ்ச்சியை கொண்டாடினார். இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த பிரச்சனையும் இல்லை என்பது தெளிவாகிவிட்டது. இது மும்பை ரசிகர்களுக்கு நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.