இதுதான் பவுலிங் ரகசியமா.. நேரில் வந்த அலீசா ஹேலி.. மனைவி முன் மாஸ் காட்டிய மிட்சல் ஸ்டார்க்!
மும்பை : மும்பை அணிக்கு எதிரான போட்டியை பார்க்க கிரிக்கெட் வீராங்கனை அலீசா ஹேலி வந்த நிலையில், அவரின் கணவர் மிட்சல் ஸ்டார்க் தரமான பவுலிங்கை வெளிப்படுத்தி 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கேகேஆர் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டலான வெற்றியை பெற்றுள்ளது. கடைசி 4 பந்துகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி நட்சத்திர வீரர் மிட்சல் ஸ்டார்க் கேகேஆர் அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலம் கேகேஆர் அணி பிளே ஆஃப் சுற்றில் ஒரு காலினை எடுத்து வைத்துவிட்டதாக பார்க்கப்படுகிறது.

ஐபிஎல் ஏலத்தில் கேகேஆர் அணியால் ரூ.24.75 கோடிக்கு வாங்கப்பட்டார் மிட்சல் ஸ்டார்க். ஆனால் இந்த சீசனில் மிட்சல் ஸ்டார்க்கின் ஆட்டம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. 8 போட்டிகளில் விளையாடிய மிட்சல் ஸ்டார், வெறும் 7 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருந்தார். அதுமட்டுமல்லாமல் அதிக ரன்களையும் விட்டுக் கொடுத்து ரன் வள்ளலாக இருந்தார் மிட்சல் ஸ்டார்க்.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது நேரடியாகவே கேகேஆர் அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர் கோபத்தை வெளிப்படுத்தினார். இந்த நிலையில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் மிட்சல் ஸ்டார்க் 3.5 ஓவர்களில் 33 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

அதிலும் கடைசி விக்கெட்டான கோட்ஸி-க்கு வீசிய யார்க்கர் பந்து மிட்சல் ஸ்டார்க் கம்பேக்காக அமைந்தது. சரியான நேரத்தில் கேகேஆர் அணிக்காக ஸ்டார்க் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். ஸ்டார்கின் தரமான செயல்பாட்டிற்கு மற்றொரு முக்கியமான காரணமும் அமைந்துள்ளது. இந்த போட்டியில் நேரில் காண்பதற்கு அவரின் மனைவியும், ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீராங்கனையுமான அலீசா ஹேலி நேரில் வந்தார்.
அவரும் சக ஆஸ்திரேலியா வீராங்கனையுமான லீசா ஸ்தலேக்கர் இருவரும் மைதானத்தில் அமர்ந்து போட்டியை பார்த்தனர். வழக்கமாக அலீசா ஹேலி ஆடும் போட்டியை காண மிட்சல் ஸ்டார்க் வருவார். இம்முறை கணவரின் ஆட்டத்தை பார்க்க மனைவி வந்தார். இதனால் மனைவியை மகிழ்ச்சிப்படுத்தும் வகையில் மிட்சல் ஸ்டார்க் செயல்பட்டதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications