மும்பை : மும்பை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 67வது லீக் போட்டியில் லக்னோ அணியை எதிர்த்து மும்பை அணி விளையாடியது. இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்ததால், ஆறுதல் வெற்றிக்காக விளையாடினார்கள். இதில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ அணி நிக்கோலஸ் பூரனின் அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய பூரன் 29 பந்துகளில் 75 ரன்களை விளாசினார். இதன்பின் 215 ரன்கள் என்ற இலக்குடன் மும்பை அணி தரப்பில் ரோகித் சர்மா - பிரெவிஸ் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

மேட் ஹென்றி வீசிய 2வது ஓவரிலேயே அடுத்தடுத்து 2 சிக்சர்களை விளாசி ரோகித் சர்மா அதிரடியாக தொடங்கினார். இந்த நிலையில் 3.5 ஓவர்கள் வீசப்பட்டிருந்த போது, திடீரென மழை பெய்ய தொடங்கியது. இதனால் சுமார் 30 நிமிடங்கள் வரை ஆட்டம் தடைப்பட்டது. பின்னர் மீண்டும் ஆட்டம் தொடங்கிய நிலையில், ரோகித் சர்மா அதிரடியில் பொளந்து கட்டினார். இதனால் 6 ஓவர்கள் முடிவில் மும்பை அணி விக்கெட் இழப்பிற்கு 53 ரன்களை சேர்த்திருந்தது.
பின்னர் மோசின் கான் வீசிய 7வது ஓவரில் 4, 4, 6 என்று விளாசி ரோகித் சர்மா 28 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். ஆனால் மறுமுனையில் டைமிங் செய்ய முடியாமல் திணறிய பிரெவிஸ், நவீன் உல் ஹக் பவுலிங்கில் 23 ரன்கள் எடுத்து வெளியேறினார். பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ், இடதுகை ஸ்பின்னரான க்ருனால் பாண்டியாவை ஸ்வீப் ஆடி டக் அவுட்டானார். தொடர்ந்து ரோகித் சர்மாவும் 38 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, மும்பை அணி 12 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்திருந்தது.
தொடர்ந்து வந்த ஹர்திக் பாண்டியா அதிரடியாக பவுண்டரி, சிக்ஸ் அடித்து சிறப்பாக தொடங்கினார். இதனால் ஃபினிஷிங் செய்து கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, அவரும் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் இஷான் கிஷன் - நமன் திர் கூட்டணி இணைந்து அதிரடியாக ஆடியது. மும்பை அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 90 ரன்கள் எடுக்க வேண்டிய தேவை எழுந்தது. அடுத்த 2 ஓவர்களில் மும்பை அணி 24 ரன்களை சேர்த்தது. இதனால் 18 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வந்தது.
தொடர்ந்து நவீன் உல் ஹக் வீசிய 18வது ஓவரில் 14 ரன்கள் சேர்க்கப்பட, 19வது ஓவரில் 18 ரன்கள் விளாசப்பட்டது. இதனால் கடைசி ஓவரில் மும்பை வெற்றிக்கு 34 ரன்கள் தேவைப்பட்டன. இந்த ஓவரை வீச நவீன் உல் ஹக் அழைக்கப்பட்டார். இந்த ஓவரின் 3வது பந்தில் இஷான் கிஷன் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இதனால் இந்த ஐபிஎல் தொடரில் கடைசி இடத்தில் மும்பை நிறைவு செய்துள்ளது. இதன் மூலம் 10வது இடத்தில் 2 முறை நிறைவு செய்த அணி என்ற மோசமான சாதனையை மும்பை படைத்துள்ளது.