மும்பை : ஆர்சிபி அணிக்கு எதிரான வெற்றிக்கு பின் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா கருத்து தெரிவித்துள்ளார்.
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. வான்கடே மைதானத்தில் 197 ரன்கள் என்ற இலக்கை 15.3 ஓவர்களில் விரட்டி சாதனை படைத்துள்ளது. இந்த சீசனில் அடுத்தடுத்து 3 தோல்விகளை சந்தித்த மும்பை அணி, தற்போது அடுத்தடுத்து 2 வெற்றிகளை பெற்றுள்ளது.

இதன் மூலம் புள்ளிப்பட்டியலிலும் மும்பை அணி முன்னேற்றம் கண்டுள்ளது. ஒரு வெற்றியுடன் 8வது இடத்தில் இருந்த மும்பை அணி, தற்போது 2 வெற்றியுடன் 7வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் பும்ரா, ரோகித் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் கோபால் உள்ளிட்டோர் முக்கிய காரணமாக அமைந்தனர்.
இந்த வெற்றிக்கு பின் ஹர்திக் பாண்டியா பேசுகையில், எப்போதும் வெற்றிபெற்றோம் என்ற உணர்வே மகிழ்ச்சியை கொடுக்கும். அதிலும் இப்படியொரு வெற்றியை பெற்றது அற்புதமாக உள்ளது. இம்பேக்ட் பிளேயர் விதியால் எங்களால் கூடுதல் பவுலர்களுடன் களமிறங்க முடிகிறது. அது எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது என்று தாராளமாக சொல்லலாம். சேஸிங்கை பொறுத்தவரை ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் இருவரின் அதிரடி ஆட்டம் தான், 15.3 ஓவர்களில் சேஸிங் முடிந்ததற்கு காரணம்.
வீரர்கள் அனைவரும் எங்கள் அணியின் நிலை என்ன என்பது நன்றாக தெரியும். எங்களுக்கான இலக்கு குறைவாக இருப்பது தெரிய வந்த பின், நாங்கள் அனைவருமே ரன் ரேட்டை அதிகரிப்பது குறித்து நினைத்திருந்தோம். அதேபோல் பவுலிங்கை பொறுத்தவரை பும்ரா எங்கள் அணியில் விளையாடுவது அதிர்ஷ்டம் தான். ஒவ்வொரு முறையும் அவர் தனது திறமையை முழுமையாக வெளிப்படுத்தி வருகிறார். விக்கெட் தேவையென்ற போதெல்லாம் அவரிடம் தான் பந்தை கொடுப்பேன்.
அவர் தொடர்ச்சியாக வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல் அனுபவம் மற்றும் நம்பிக்கையும் அவருக்கு அதிகமாக உள்ளது. சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்த போது, வெல்கம் பேக் என்று வாழ்த்தினேன். குஜராத் அணிக்கு கேப்டனாக இருந்த போது அவருக்கு எதிராக விளையாடியிருக்கிறேன். சில இடங்களில் சூர்யகுமார் யாதவ் அடிக்கும் ஷாட்களை வேறு எந்த வீரரும் அடித்து பார்த்ததில்லை. அவருக்கு ஃபீல்டிங் வைப்பது கடினம் என்று தெரிவித்துள்ளார்.