மும்பை : டி20 கிரிக்கெட்டில் வெற்றிகரமான பவுலராக உருவாகுவதற்கு வெறும் யார்க்கர் பந்தை மட்டும் நம்பி வரக் கூடாது என்று மும்பை அணியின் நட்சத்திர பவுலர் பும்ரா அட்வைஸ் கொடுத்துள்ளார்.
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றுள்ளார் பும்ரா. வான்கடே மைதானம் போன்ற பேட்ஸ்மேன்களின் சொர்க்கம் என்று சொல்லப்படும் பிட்சில் வெறும் 21 ரன்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது சாதாரணம் கிடையாது. இதனை ஒவ்வொரு போட்டியிலும் பும்ரா செய்து வருவது தான் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது.

டி20 பவுலிங் தொடர்பாக பும்ரா பேசுகையில், 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது மகிழ்ச்சி தான். ஆனால் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவேன் என்று எதிர்பார்க்கவில்லை. முதல் 10 ஓவர்களில் பந்து பிட்சில் நன்றாக நின்று எழும்பியது. அதனை முதல் ஓவர் வீசும் போதே கண்டறிந்து, சாதகமாக பயன்படுத்தி கொண்டேன். சில நாட்களில் நமக்கு சாதகமாக சில விஷயங்கள் நடக்கும். கேட்ச்-கள் சரியாக ஃபீல்டர்களிடம் சிக்கும். அப்படியான ஒருநாள் தான் இது.
டி20 கிரிக்கெட்டை பொறுத்தவரை பவுலர்களுக்கு நிச்சயம் சவாலான விஷயம் என்று சொல்ல வேண்டும். இதில் சிறப்பாக செயல்பட எண்ணற்ற திறமைகளை கொண்டிருக்க வேண்டும். அதற்காக தான் கடினமாக பயிற்சி செய்கிறேன். இந்த சூழலில் தான் எனக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கிறது. வெறும் யார்க்கர் பந்தை மட்டும் இங்கு காலம் தள்ள முடியாது. ஏனென்றால் சில நாட்கள் என்னால் யார்க்கரை சரியாக வீச முடியாமல் போகலாம்.
அந்த நேரத்தில் மாற்று பந்துகளை வீச தொடங்க வேண்டும். ஒவ்வொரு நாளும் நமது பவுலிங்கை வைத்து ஏராளமான தகவல்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. எளிதாக பேட்ஸ்மேன்கள் நம்மை புரிந்து கொள்ள முடிகிறது. அதற்கு நம்மிடம் பல்வேறு வகையான பந்துகளை சிறப்பாக வீசும் திறமை இருக்க வேண்டும். சில நேரங்களில் மோசமான செயல்படும் போது அதில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளாக நான் மோசமாக பவுலிங் செய்யும் போது, அந்த வீடியோக்களை பார்க்கும் வழக்கத்தை வைத்திருந்தேன். எங்கு சரியாக செயல்பட்டுள்ளேன், எங்கு தவறு செய்துள்ளேன் என்பதை ஆராய்வேன். ஒரே நாளில் எதையும் மாற்றிவிட முடியாது. எல்லாவற்றுக்கும் பயிற்சி தான் முக்கியம். பயிற்சியின் போது நம் மீது அழுத்தம் கொடுத்து கொள்ள வேண்டும். பெரிய சிக்சர்களை விளாசும் பேட்ஸ்மேன்களுக்கு அதிகம் பவுலிங் செய்ய வேண்டும்.
அப்போது தான் அழுத்தத்தை சமாளிக்க முடியும். பேட்ஸ்மேன்கள் எப்படி விளையாடுகிறார்கள், என்ன மாதிரி ஷாட்களை உருவாக்குகிறார்கள் என்பது தெரியும். அதற்கான பதில்களை தேடும்க் போது பயிற்சி இன்னும் சுவாரஸ்யமாக அமையும். அதேபோல் சில நேரங்களில் பேட்ஸ்மேன்கள் எதில் பலமாக இருக்கிறார்கள் என்பதை பார்ப்பேன். சில நேரங்களில் பிட்ச் கொஞ்சம் ஸ்லோவாக இருக்கும் போது, யார்க்கரை வீச வேண்டிய அவசியமில்லை. ஸ்லோயர் பால் மற்றும் பவுன்சரை பயன்படுத்தலாம்.
அதேபோல் எல்லா வகையான பந்துகளையும் ஒரே நாளில் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. ஆட்டம் எப்படி மாறுகிறது என்பதை ஆராய்ந்து, என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்க வேண்டும். டி20 கிரிக்கெட்டில் பவுலர்களுக்கு ஈகோ இருக்கவே குடாது. 145 கிமீ வேகத்தில் பவுலிங் செய்தாலும், பிட்ச் ஸ்லோ பால்களுக்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில், அதனை செய்ய வேண்டும். அதனால் அனைத்தையும் பார்த்து கவனித்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.