மும்பை : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அதிரடி பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக் ஆடிய ஷாட்களை பார்த்து பதறிப் போன்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் பிற வீரர்கள் ஒன்று கூடி அவரை எப்படி பவுண்டரி அடிக்கவிடாமல் தடுப்பது என பேசினர்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இந்தப் போட்டியில் கடைசி ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. ஆனால், அதே சமயம் தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 53 ரன்கள் குவித்தார். இத்தனைக்கும் கடைசி நான்கு ஓவர்களில் பும்ரா இரண்டு ஓவர்களை வீசி நான்கு விக்கெட்களை வீழ்த்தி இருந்தார்.

விக்கெட் வீழ்ச்சிக்கு நடுவே, பும்ராவின் ரன் குவிக்க முடியாத ஓவர்களை கடந்து தினேஷ் கார்த்திக் பெரிய அளவில் ரன் குவித்தார். ஆகாஷ் மதவால் வீசிய ஓவரில் தேர்ட் மேன் திசையில் தொடர்ந்து நான்கு பவுண்டரிகளை அடித்தார். அவர் அந்த ஓவரில் மூன்று பவுண்டரிகள் அடித்த பின் மும்பை இந்தியன்ஸ் அணி பதற்றம் அடைந்தது.
கேப்டன் ஹர்திக் பாண்டியா, டிம் டேவிட், ஆகியோர் ஆகாஷ் மதவால் உடன் பேசினர். ஆனாலும், அந்த ஓவரின் கடைசி பந்தில் நான்காவது பவுண்டரியை தேர்ட் மேன் திசையில் அடித்தார். பின்னர் 20வது ஓவரில் மீண்டும் ஆகாஷ் மதவால் பந்துவீச்சில் 19 ரன்கள் குவித்தது பெங்களூரு அணி. தினேஷ் கார்த்திக் அந்த ஓவரில் இரண்டு சிக்ஸ் மற்றும் ஒரு ஃபோர் அடித்தார். 20 ஓவர்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 8 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. ஃபாப் டுப்லேசிஸ் 61, ரஜத் படிதார் 50 மற்றும் தினேஷ் கார்த்திக் 53 ரன்கள் குவித்து இருந்தனர்.
இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 15.3 ஓவர்களில் எல்லாம் வெற்றி இலக்கை எட்டியது. அந்த வகையில் தினேஷ் கார்த்திக்கின் அபார பேட்டிங் வீணாகிப் போனது. மும்பை இந்தியன்ஸ் அணியின் இஷான் கிஷன் 34 பந்துகளில் 69 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 19 பந்துகளில் 52 ரன்களும் குவித்து தங்கள் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.