மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிளென் மேக்ஸ்வெல் டக் அவுட் ஆனார். 2024 ஐபிஎல் தொடரில் இதுவரை ஆறு போட்டிகளில் மூன்று முறை டக் அவுட் ஆகி பெரும் ஏமாற்றம் அளித்து இருக்கிறார் மேக்ஸ்வெல்.
2023 ஐபிஎல் தொடரில் இதே பெங்களூரு அணிக்காக சிறப்பாக பேட்டிங் செய்து இருந்தார் மேக்ஸ்வெல். 2023 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி கோப்பை வென்றதில் மேக்ஸ்வெல் பங்கும் அதிகம். குறிப்பாக ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை நோக்கி சென்ற போட்டியை தனி ஆளாக காலில் காயத்துடன் நின்று பேட்டிங் செய்து இரட்டை சதம் அடித்து வெற்றியாக மாற்றினார்.

இப்படி உச்சகட்ட ஃபார்மில் இருந்த மேக்ஸ்வெல் 2024 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியை பிளே-ஆஃப் செல்ல வைப்பார் என அந்த அணியின் ரசிகர்கள் நம்பினர். ஆனால், நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை ஆறு போட்டிகளில் பங்கேற்று 32 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் மேக்ஸ்வெல். இதில் ஒரு போட்டியில் 28 ரன்கள் எடுத்து இருந்தார். அதை விடுத்தது கணக்கிட்டால் ஐந்து போட்டிகளில் 4 ரன்கள் எடுத்துள்ளார். இதில் மூன்று டக் அவுட்கள் வேறு.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 3 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் அடுத்து வந்த வில் ஜாக்ஸ் 8 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின் டுபிலேசிஸ், ரஜத் படிதார் அபார ஆட்டம் ஆடினர். இருவரும் அரைசதம் அடித்தனர். ரஜத் 50 ரன்களில் ஆட்டமிழந்த பின் மேக்ஸ்வெல் களமிறங்கினார். அவர் 4 பந்துகளை சந்தித்து ரன் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.