மும்பை : 2024 ஐபிஎல் தொடரில் தான் ஆடிய நான்கு போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று இருக்கும் நிலையில் அடுத்த போட்டியில் இரண்டு அனுபவ வீரர்களை நீக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்ததாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் போட்டியில் மோத உள்ளது. பெங்களூரு அணியும் மோசமான நிலையில் தான் இருக்கிறது. அந்த அணி தான் ஆடிய ஐந்து போட்டிகளில் நான்கு தோல்விகளை சந்தித்து இருக்கிறது. எனவே, மும்பை அணியை வீழ்த்த கடினமாக முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல, பெங்களூரு அணியை வீழ்த்த திட்டமிட்டு இருக்கும் மும்பை அணி, விராட் கோலிக்காக புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது பெங்களூரு அணியில் ஃபார்மில் இருக்கும் ஒரே பேட்ஸ்மேன் விராட் கோலி மட்டுமே. அவரை வீழ்த்துவதே முக்கியம் என்ற நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி ஸ்ரேயாஸ் கோபாலை களமிறக்க உள்ளது.
கடந்த காலங்களில் ஸ்ரேயாஸ் கோபால், விராட் கோலி விக்கெட்டை பல முறை வீழ்த்தி இருக்கிறார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள மூத்த சுழற் பந்துவீச்சாளரான பியுஷ் சாவ்லா இந்த ஆண்டு இதுவரை நடந்த போட்டிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கடைசியாக நடந்த டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவர் 4 ஓவர்களில் 32 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. எனவே, அவர் நீக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
அதே போல ஆப்கானிஸ்தானை சேர்ந்த அனுபவ ஆல் - ரவுண்டர் முகமது நபி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இலங்கை வேகப் பந்துவீச்சாளர் நுவான் துஷாரா அணியில் சேர்க்கப்படலாம் என கூறப்படுகிறது. ஹர்திக் பாண்டியா தற்போது தான் காயத்தில் இருந்து மீண்டு வந்திருப்பதால் அவரால் சரியாக பந்து வீச முடியவில்லை. எனவே, கூடுதல் வேகப் பந்துவீச்சாளர் தேவைப்படுகிறார். அந்த வகையில் சுழற் பந்துவீச்சாளரான நபி நீக்கப்பட்டு நுவான் துஷாரா அணியில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது.