மும்பை : மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கள நடுவர்கள் மற்றும் 3வது நடுவர் ஆகியோர் மும்பை அணிக்கு சாதகமாக செயல்படுவதாக ஆர்சிபி ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்களை குவித்துள்ளது. சிறப்பாக விளையாடிய டூ பிளசிஸ் 40 பந்துகளில் 61 ரன்களும், 23 பந்துகளில் 53 ரன்களும், ரஜத் பட்டிதர் 26 பந்துகளில் 50 ரன்களும் சேர்த்து அசத்தினர். மும்பை அணி தரப்பில் நட்சத்திர வீரர் பும்ரா 4 ஓவர்களில் 21 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த போட்டியில் நடுவர்களின் செயல்பாடுகள் மும்பை அணிக்கு முழுக்க முழுக்க சாதகமாக இருந்தது அப்பட்டமாக தெரிந்தது. தொடக்கம் முதலே ஆர்சிபி அணிக்கு எதிராக நடுவர்கள் நிதின் மேனன், வினீத் குல்கர்னி மற்றும் விரேந்தர் சர்மாவின் முடிவுகள் இருந்தது ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ரஜத் பட்டிதர் அடித்த பவுண்டரியை ஆகாஷ் மத்வால் தடுக்க முயன்றார்.
ஆனால் அவரின் உடல் பவுண்டரி லைனில் இருந்த போது, பந்து அவரது தொடையில் பட்டது. இதனை 3வது நடுவராக இருந்த நிதின் மேனன், பவுண்டரி இல்லை என்று தவறாக அறிவித்தார். தொடர்ந்து ஆகாஷ் மத்வால் வீசிய பந்து ஒய்டாக செல்ல, அது கள நடுவரால் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. அதேபோல் பும்ரா வீசிய யார்க்கர் பந்து லோம்ரோரின் கால்களில் அடித்து சென்றது.
அது சரியாக லெக் ஸ்டம்ப்-க்கு வெளியில் சென்றது தெரிய வந்த போது, நடுவரின் தீர்ப்பு என்று அறிவிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதையெல்லாம் கடந்து கடைசி ஓவரில் ஆகாஷ் மத்வால் வீசிய பந்து தினேஷ் கார்த்திக்கின் நெஞ்சு பகுதிக்கு வந்தது. அதனை தடுத்த தினேஷ் கார்த்திக் நோ-பாலுக்கு மேல் முறையீடு செய்ய, அதனை 3வது நடுவரால் சோதனை செய்யப்பட்டது.
அந்த பந்தின் Deflection மேலே சென்ற போதும், பந்து கீழே சென்றதாக Deflection காட்டப்பட்டது. இதனை பார்த்த விராட் கோலி பவுண்டரி லைனில் நின்ற நடுவர்களுடன் ஏன் நோ-பால் இல்லை என்று வாக்குவாதம் மேற்கொண்டார். அதன்பின் 3வது நடுவர் நோ-பால் இல்லை என்று அறிவித்தார். இதனை வர்ணனையில் இருந்தவர்கள், நடுவர்களுக்கு இன்று மும்பை இந்தியன்ஸ் ஜெர்சியை அணிவித்துவிடலாம் என்று கிண்டல் செய்தனர். நடுவர்களின் ஒரு சார்பான முடிவு ஆர்சிபி ரசிகர்களிடையே கடுமையான விமர்சனத்தை பெற்று வருகிறது.