மும்பை : ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் அடுத்தப் போட்டியில் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது. இந்தப் போட்டியில் தோல்வியடைந்ததற்கு ஆர்சிபி அணியின் பேட்டிங் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பவர் பிளே ஓவர்களில் ஆர்சிபி அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தது.

இருப்பினும் ரஜத் பட்டிதர் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து மீட்டெடுத்தார். அதன்பின் வந்த மேக்ஸ்வெல் அதிரடியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வார் என்று பார்க்கப்பட்ட நிலையில், டக் அவுட்டாகி சாதனை படைத்துள்ளார். இதன் காரணமாக ஆர்சிபி அணி 5வது தோல்வியை இந்த சீசனில் பெற்றுள்ளது. கிட்டத்தட்ட ஆர்சிபி அணியின் கனவு முடிவுக்கு வந்ததாகவே பார்க்கப்படுகிறது.
இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் ஆர்சிபி அணியின் கிளென் மேக்ஸ்வெல் ஒரு போட்டியில் கூட குறிப்பிடத்தகுந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதே வான்கடே மைதானத்தில் ஆஸ்திரேலியா அணிக்காக ஒற்றை காலில் நின்று இரட்டை சதம் விளாசிய மேக்ஸ்வெல், ஆர்சிபி அணிக்காக ஒரு ரன்னை கூட சேர்க்காமல் இருந்து வருகிறார்.
இதுகுறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பேசுகையில், ஆர்சிபி அணிக்காக வில் ஜாக்ஸ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை என்றாலும், வாய்ப்பு வழங்கப்படும் என்று நினைக்கிறேன். ஏற்கனவே கேமரூன் க்ரீனும் அறிமுகமாகிவிட்டார். வில் ஜாக்ஸை ஆட வைத்ததில் எந்த தவறும் இல்லை. ஆனால் மும்பை மாதிரியான பிட்ச்களில் கேமரூன் க்ரீன் களமிறக்குவதே சிறந்த முடிவாக இருக்கும்.
அடுத்த போட்டியில் ஆர்சிபி அணியில் இருந்து யாரையாவது நீக்க வேண்டுமென்றால், அது மேக்ஸ்வெல்லாக தான் இருக்க வேண்டும். ஏனென்றால் மேக்ஸ்வெல்லால் ரன்களையும் சேர்க்க முடியவில்லை. பவுலிங்கில் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. அவரது இடத்தில் வேறு வீரர்கள் களமிறங்கினால், நிச்சயம் சில ரன்களையாவது சேர்ப்பார்கள் என்று விமர்சித்துள்ளார்.