மும்பை : 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விரிசல் இல்லை என அந்த அணியை சார்ந்த பலரும் சமாளித்து வருகின்றனர். இந்த நிலையில் அணியின் வெற்றியைக் கூட கண்டு கொள்ளாமல் ரோஹித் சர்மா - பும்ரா தீவிரமாக பேசிக் கொண்டு இருந்தனர். பின்னர் கேமரா தங்களை பதிவு செய்கிறது என்பதை கண்ட பிறகு இருவரும் பதறினர். இதன் மூலம் அவர்கள் இருவரும் எதைப் பற்றி பேசி இருக்கக் கூடும் என்ற ஊகங்கள் எழுந்துள்ளன.
மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டதை அந்த அணியில் நீண்ட காலமாக இடம் பெற்று வரும் பும்ரா, சூர்யகுமார் யாதவ் போன்ற வீரர்கள் விரும்பவில்லை என கூறப்படுகிறது. அதே போல, கேப்டன் பதவியை இழந்த ரோஹித் சர்மாவும் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது.

2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்த போது அணியில் விரிசல் என்ற பேச்சு அதிகரித்தது. ஆனால், அதன் பின் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது அந்த அணி. நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.
அந்தப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் 19 பந்துகளில் 52 ரன்கள் குவித்து மும்பை அணியை வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றார். அவர் ஆட்டமிழந்து வெளியேறிய போது ஒட்டுமொத்த மைதானமும் எழுந்து நின்று அவரை பாராட்டியது. மும்பை அணியின் அறையில் இருந்த அனைவரும் பாராட்டினர். ஆனால், அப்போது ரோஹித் சர்மா மற்றும் பும்ரா தீவிரமாக பேசிக் கொண்டு இருந்தனர்.
போட்டியில் என்ன நடக்கிறது என்பதை குறித்து பார்க்காத அவர்கள் இருவரும் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது திடீரென கேமரா அவர்கள் பக்கம் திரும்பியதை கண்ட உடன் இருவரும் பதறினர். பும்ரா உடனே சூர்யகுமார் யாதவை பாராட்டி கைத்தட்டினார். இந்த காட்சியை கண்ட சில ரசிகர்கள் ரோஹித் சர்மாவும், பும்ராவும் மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு விலகுவதை குறித்து பேசி இருக்கலாம் என்றும், அவர்கள் இருவரும் முதல் போட்டியில் இருந்தே தனிய அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை வைத்து அந்த அணியில் இன்னும் விரிசல் இருக்கிறது என்றும் கூறி வருகின்றனர்.