மும்பை : ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் டாஸின் போது மும்பை அணிக்கு சாதகமாக நடுவராக செயல்பட்ட ஸ்ரீநாத் நாணயத்தை திருப்பியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் ஆர்சிபி அணி நிர்ணயித்த 197 ரன்கள் என்ற இலக்கை, மும்பை அணி 15.3 ஓவர்களிலேயே சேஸிங் செய்து அசத்தல் வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் ஆர்சிபி அணியின் பவுலிங் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

அதேபோல் மும்பை அணியின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தாலும், நடுவர்கள் நிதின் மேனன், வினீத் குல்கர்னி மற்றும் விரேந்தர் சர்மா ஆகியோரின் முடிவுகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. ஆர்சிபி அணியின் ரஜத் பட்டிதர் அடித்த பவுண்டரியை தடுக்க முயன்ற ஆகாஷ் மத்வால் சில தவறுகளை செய்தார். அவரின் உடல் பவுண்டரி எல்லை தொட்டிருந்த போது, பந்தும் தொடை பகுதியில் ஒட்டியிருந்தது.
ஆனாலும் பவுண்டரி அளிக்கப்படவில்லை. அதேபோல் கடைசி ஓவரில் ஆகாஷ் மத்வால் வீசிய பந்தின் Deflection அப்பட்டமாக நோ-பால் என்று தெரிந்த போதும், 3வது நடுவர் நோ-பால் இல்லை என்று அறிவித்தார். ஆனாலும் பந்து வேறு இடத்திலும், Deflection வேறு பகுதியிலும் இருந்தது நடுவர்கள் மீதான நம்பிக்கையையே சந்தேகம் கொள்ள செய்துள்ளது.
இந்த நிலையில் ஆர்சிபி - மும்பை அணிகளுக்கு இடையிலான டாஸிலும் நடுவர்களின் செயல்பாடுகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டாஸ் போடப்பட்ட நாணயத்தை ஆட்ட நடுவரான ஜவஹல் ஸ்ரீநாத் எடுத்த போது, தலைகீழாக மாற்றியதாக ஆர்சிபி ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுதொடர்பாக சில வீடியோக்களும் அதிகமாக சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு வருகிறது.