IPL 2024: எனக்கா இந்திய அணியில் இடமில்லை.. பொங்கி எழுந்த இளம் வீரர்.. கோலியை ஓரங்கட்டிய ரியான் பராக்
மும்பை : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இடம் பெற்றுள்ள ரியான் பராக் தற்போது உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார். இந்திய டி20 அணியில் இடம் கிடைக்காத நிலையில், 2024 ஐபிஎல் தொடரில் மூன்று போட்டிகளில் ஆடி மூன்றிலும் முத்திரை பதித்து இருக்கிறார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற முக்கிய காரணமாகவும் இருந்திருக்கிறார். மேலும், விராட் கோலிக்கு இணையாக ரன் குவித்து ஐபிஎல் தொடரின் ஆரஞ்ச் தொப்பியை வென்று இருக்கிறார்.
2023 ஐபிஎல் தொடரில் ரியான் பராக் படுமோசமான ஃபார்மில் இருந்தார். அப்போது 7 போட்டிகளில் 78 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். ஆனால், தனது நிலையை உணர்ந்து தீவிர பயிற்சி மேற்கொண்ட அவர் பின்னர் உள்ளூர் போட்டிகளில் ரன் குவிக்கத் தொடங்கினார்.

அதில் உச்சமாக சையது முஷ்டாக் அலி டி20 தொடரில் தொடர்ந்து ஏழு போட்டிகளில் ஏழு அரைசதம் அடித்து மிகப் பெரும் சாதனை படைத்தார். ஆனால், அதன் பின்னும் அவருக்கு இந்திய டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை. தன்னை டி20 அணியில் தேர்வு செய்வார்கள் என எதிர்பார்த்து ஏமாந்த ரியான் பராக், தான் தனது வேலையை செய்து கொண்டே இருப்பேன் என பதிவிட்டு இருந்தார்.
அதே போல தற்போது 2024 ஐபிஎல் தொடரில் 3 போட்டிகளில் ஆடி இரண்டு அரைசதங்கள் அடித்து, மொத்தம் 181 ரன்கள் குவித்துள்ளார். அதுவும் மூன்று போட்டிகளிலும் நாட் அவுட்டாக இருந்துள்ளார். விராட் கோலியும் மூன்று போட்டிகளில் 181 ரன்கள் அடித்து இருக்கிறார். ஆனால், அவர் ஒரு போட்டியில் மட்டுமே நாட் அவுட் ஆக இருந்தார்.
அது மட்டுமின்றி ஸ்ட்ரைக் ரேட் அடிப்படையில் பார்த்தால் 2024 ஐபிஎல் தொடரில் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் 141 ஆக உள்ளது. ரியான் பராக்கின் ஸ்ட்ரைக் ரேட் 160 ஆக உள்ளது. ஏப்ரல் கடைசி வாரத்தில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட உள்ள நிலையில், இதுவரை மூன்று போட்டிகளில் சிறப்பாக ஆடி இருக்கும் ரியான் பராக் தொடர்ந்து இதே போன்ற செயல்பாட்டை வெளிப்படுத்தினால் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications