மும்பை : வான்கடே மைதானத்தில் நடக்கவுள்ள ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பும் ரசிகர்களை கைது செய்து வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
"ஒன் பேமிலி" என்ற அடைமொழியுடன் வலம் வரும் மும்பை அணி, தற்போது பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி தவித்து வருகிறது. கேப்டன்சி மாற்றத்தால் மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் ஏற்று கொள்ள மறுத்து, மைதானத்தில் எதிர்ப்பு கோஷம் எழுப்பி வருகின்றனர். அகமதாபாத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு எழுந்த எதிர்ப்பால் கிரிக்கெட் உலகமே அதிர்ந்தது.

அதனைத் தொடர்ந்து ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது, ரோகித் சர்மா ரசிகர்கள் கோஷம் எழுப்பி ட்ரால் செய்தனர். இதனால் மும்பை அணி நிர்வாகம் மட்டுமல்லாமல், அம்பானி குடும்பத்தினரும் வருத்தத்தில் இருப்பதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவாக சோசியல் மீடியா பிரச்சாரம் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து மும்பை அணி களமிறங்கவுள்ளது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிர்ப்பு வரக் கூடாது என்பதில் மும்பை அணி நிர்வாகம் தீவிரமாக உள்ளது. சொந்த மண்ணிலேயே எதிர்ப்பு வரும் பட்சத்தில், அது அணியையும் பாதிக்கும் என்று பார்க்கப்படுகிறது.
இதனால் மைதானத்திற்கு வரும் ரசிகர்களில் யாராவது ஹர்திக் பாண்டியாவை ட்ரால் செய்யும் வகையிலோ, எதிர்ப்பு கோஷமோ எழுப்பினால், உடனடியாக காவலர்கள் மூலமாக கண்டறிந்து அவர்களை மைதானத்தில் இருந்து வெளியில் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வான்கடே மைதான நிர்வாகமும் மும்பை அணிக்கு உதவி செய்யும் என்று தெரிய வந்துள்ளது.
கடந்த சில சீசன்களாக மும்பை அணி விளையாடும் போட்டிகளின் போது எதிரணிகளின் ஜெர்சியில் வரும் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. குறிப்பாக சில ஸ்டாண்ட்களில் மும்பை ஜெர்சியுடன் மட்டுமே வர வேண்டும் என்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. அந்த வகையில் இம்முறை மும்பை அணி நிர்வாகம் தரப்பில், ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவான கோஷங்கள் வரும் வகையில் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.