MI vs SRH : ஃபார்முக்கு வந்த ஹர்திக்.. சிதறிய ஐதராபாத் பேட்ஸ்மேன்கள்.. சிஎஸ்கே ரசிகர்கள் நிம்மதி!
மும்பை : ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றிபெற 174 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 55வது லீக் போட்டியில் மும்பை அணியை எதிர்த்து ஐதராபாத் அணி களமிறங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் ஐதராபாத் அணி தரப்பில் ட்ராவிஸ் ஹெட் - அபிஷேக் சர்மா இருவரும் தொடக்கம் கொடுத்தனர். மும்பை அணி தரப்பில் பேபி மலிங்கா என்று அழைக்கப்படும் துஷாரா முதல் ஓவரை வீசினார்.

வழக்கமாக அதிரடியாக தொடங்கும் ட்ராவிஸ் ஹெட்டிக்கு இந்த போட்டியில் அதிர்ஷ்டம் அதிகமாகவே இருந்தது. அறிமுக வீரர் கம்போஜ் பவுலிங்கில் ட்ராவிஸ் ஹெட் அடித்த ஷாட்கள் எட்ஜாகி கொண்டே இருந்தது. இதனிடையே 5வது ஓவரில் ட்ராவிஸ் ஹெட் போல்டான போது, நோ-பால் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ஐதராபாத் அணி 5 ஓவர்கள் முடிவில் 51 ரன்களை சேர்த்திருந்தது.
இந்த நிலையில் 6வது ஓவரை வீசிய பும்ரா பந்தில் அபிஷேக் சர்மா 11 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த மயங்க் அகர்வால் 5 ரன்களில் வெளியேறினார். இருப்பினும் நிதிஷ் ரெட்டி - ஹெட் கூட்டணி இணைந்து ஐதராபாத் அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர். இதனால் 10 ஓவர்களில் ஐதராபாத் அணியின் ஸ்கோர் 88 ரன்களாக இருந்தது.
அப்போது பியூஷ் சாவ்லா அட்டாக்கில் வர, ட்ராவிஸ் ஹெட் சிக்ஸ் அடிக்க முயன்று 48 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து ஹர்திக் பாண்டியா வீசிய அடுத்த ஓவரிலேயே நிதிஷ் ரெட்டியும் 20 ரன்களில் வெளியேற, மீண்டும் சாவ்லா பவுலிங்கில் கிளாசன் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஷாபால் அஹ்மத் 10 ரன்களிலும், மார்கோ யான்சன் 17 ரன்களிலும், அப்துல் சமத் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 18 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்கள் சேர்த்திருந்தது.
தொடர்ந்து பும்ரா வீசிய 19வது ஓவரில் 8 ரன்கள் சேர்க்கப்பட, கடைசி ஓவரை வீச துஷாரா வந்தார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 17 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதனால் ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய பாட் கம்மின்ஸ் 17 பந்துகளில் 2 சிக்ஸ், 2 ஃபோர்ஸ் உட்பட 35 ரன்களை விளாசினார். மும்பை அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா மற்றும் சால்வா இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


Click it and Unblock the Notifications