மும்பை : இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி கம்பேக் கொடுப்பதற்கு 6 மாதங்களாகும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி 7 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றிலேயே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். உலகக்கோப்பை தொடரின் போதே காலில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் கொத்து கொத்தாக விக்கெட்டுகளை வீழ்த்தினார் முகமது ஷமி.

இந்த காயம் காரணமாக இதுவரை முகமது ஷமி கிரிக்கெட் விளையாட முடியாமல் தவித்து வருகிறார். என்சிஏவில் முறையாக சிகிச்சை பெற்ற வந்த அவர், திடீரென லண்டனுக்கு அனுப்பப்பட்டார். வலது காலில் பாதம் அருகே தசைநார் அறுவை சிகிச்சை முகமது ஷமிக்கு செய்யப்பட்டது. உலகக்கோப்பை தொடர் முடிவடைந்த போதே அறுவை சிகிச்சை செய்திருந்தால், முகமது ஷமியால் தற்போது மீண்டு வந்திருக்க முடியும். ஆனால் என்சிஏவின் தவறான கணிப்பால் முகமது ஷமியின் கம்பேக் எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனென்றால் ஐபிஎல் தொடரில் இருந்து முகமது ஷமி விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 60 நாட்களுக்கு மேலாக ஷமி ஓய்வில் இருப்பதால், டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் பயிற்சியை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முகமது ஷமி முழு ஃபிட்னஸை எட்டுவதற்கு இன்னும் சில மாதங்கள் பிடிக்கும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜெய் ஷா பேசுகையில், முகமது ஷமிக்கு அறுவை சிகிச்சை சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.
அவர் லண்டனில் இருந்து இந்தியா திரும்பிவிட்டார். தற்போது அறுவை சிகிச்சை காயம் குணமடைவதற்காக தீவிர ஓய்வில் உள்ளார். அவர் ஐபிஎல் தொடரில் மட்டுமல்லாமல், டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாவடுவதும் சந்தேகம் தான். ஏனென்றால் அவரின் கம்பேக் செப்டம்பர் மாதத்தில் தான் இருக்கும்.
செப்டம்பர் மாதத்தில் இந்தியா - வங்கதேசம் இடையிலான டெஸ்ட் மற்றும் டி20 தொடர் நடக்கவுள்ளது. அதில் முகமது ஷமி களமிறங்குவார். கேஎல் ராகுலை பொறுத்தவரை எந்த அறுவை சிகிச்சையும் தேவையில்லை. அவருக்கு சில வலி நிவாரணி ஊசிகள் மட்டுமே தேவையாக இருந்தது. ஐபிஎல் தொடருக்கு தயாராகும் வகையில் கேஎல் ராகுல் ஏற்கனவே என்சிஏவில் பயிற்சியை தொடங்கிவிட்டார் என்று கூறியுள்ளார்.