மும்பை : இந்திய அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் இதயம் நொறுங்கி விட்டதாக சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
சமீபத்தில் இந்திய டி20 அணியின் தற்போதைய கேப்டன் சூர்யகுமார் யாதவ் இதே போன்ற பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் முகமது சிராஜ் இதயம் நொறுங்கிவிட்டது என உணர்த்தும் வகையில் பதிவிட்டு இருக்கிறார். ஆனால், அதன் காரணம் என்ன என சொல்லவில்லை.

இந்த நிலையில், சமூக ஊடகங்களில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. விராட் கோலி அல்லது ரோஹித் சர்மா தொடர்பான விவகாரம் தான் காரணம் என சிலர் கூறி வருகின்றனர். சிலரோ சிராஜின் ஐபிஎல் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏலத்தில் மோசமான வீரர்களை வாங்கியதாக கடும் விமர்சனம் எழுந்துள்ளதால் இப்படி செய்து இருக்கிறார் எனவும் கூறி வருகின்றனர்.
முன்னதாக சூர்யகுமார் யாதவ் தனது ஐபிஎல் அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை பதவி நீக்கம் செய்து, ஹர்திக் பாண்டியாவை நியமித்த உடன் இதயம் நொறுங்கி விட்டதாக பதிவிட்டு இருந்தார். ஆனால், சிராஜ் ஐந்து நாட்கள் கழித்து அதே போன்ற பதிவை வெளியிட்டது ஏன்? சிராஜும் ரோஹித் சர்மா நீக்கத்தின் பின்னணி குறித்து தற்போது அறிந்து, அதனால் மன வருத்தம் அடைந்து இருக்கிறாரா? என்ற கேள்வியை ரசிகர்கள் முன் வைத்து உள்ளனர்.
மறுபுறம் விராட் கோலி 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க மாட்டார் என சில தகவல்கள் வெளியாகி வந்தன. அது உண்மை தான் என்பதை அறிந்து கோலிக்கு ஆதரவாக இப்படி பதிவிட்டு இருக்கிறாரா? என சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இந்த இரண்டு காரணமும் இல்லை என்றால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 2024 ஐபிஎல் மினி ஏலத்தில் யாஷ் தயாள், அல்சாரி ஜோசப், டாம் கர்ரன் போன்ற ஃபார்மில் இல்லாத வேகப் பந்துவீச்சாளர்களை பல கோடிகள் கொடுத்து வாங்கி இருந்தது. அது கடும் விமர்சனத்தை சந்தித்தது. அந்த அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் முகமது சிராஜ் தான்.
இந்த நிலையில், பெங்களூர் அணியின் ஏல செயல்பாட்டை விமர்சித்த அந்த அணியின் முன்னாள் பந்துவீச்சு ஆலோசகர் பிரசன்னா ராமன், அஸ்வின் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பெங்களூர் அணியின் வேகப் பந்துவீச்சு 2024 ஐபிஎல் தொடரில் மோசமாக இருக்கும் என கேலி செய்யும் வகையில் விமர்சனம் செய்து இருந்தார். அதை கேள்விப் பட்டு சிராஜ் நெருக்கமான ஒருவரே தன்னையும், தன் அணியையும் பற்றி இப்படி பேசி இருக்கிறாரே என இதயம் நொறுங்கிவிட்டதாக பதிவிட்டு இருக்கலாம் என்றும் சில ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
எது எப்படியோ, முக்கியமான தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது ஷமி காயம் காரணமாக இடம் பெறாத நிலையில், பும்ரா, முகமது சிராஜ் கையில் தான் வேகப் பந்துவீச்சு உள்ளது. சிராஜ்-க்கு கூடுதல் பொறுப்பு உள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில் தேவையற்ற சர்ச்சைகளை கிளப்பும் விஷயங்களில் அவர் ஈடுபடாமல் போட்டியில் கவனம் செலுத்த வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.