சென்னை : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் அதிரடி பேட்ஸ்மேன் ஆண்ட்ரே ரஸ்ஸல், தோனி குறித்து மனம் திறந்து ஒரு பதிவை பகிர்ந்து இருக்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவை என்ற நிலையில் தோனி பேட்டிங் செய்ய வந்தார். சேப்பாக்கம் மைதானத்தில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இதற்கு முன் நடந்த இரண்டு போட்டிகளில் தோனி பேட்டிங் செய்யவில்லை. இந்த நிலையில், இந்த ஆண்டு சிஎஸ்கே அணியின் மைதானமான சேப்பாக்கத்தில் முதல் முறையாக தோனி பேட்டிங் செய்ய வந்ததை அடுத்து ரசிகர்கள் பெரும் கோஷம் எழுப்பினர்.
அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆண்ட்ரே ரஸ்ஸல் பவுண்டரி எல்லைக்கு அருகே ஃபீல்டிங் நின்று இருந்தார். அப்போது ரசிகர்கள் எழுப்பிய சத்தத்தை தாங்க முடியாத அவர் தன் காதுகளை மூடிக் கொண்டார். பின்னர் போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்ற பின் தோனியுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்தார் ரஸ்ஸல். அனேகமாக அவர் ரசிகர்கள் எழுப்பிய கோஷம் குறித்து அவரிடம் பேசி இருக்கலாம் என ரசிகர்கள் கூறி வந்தனர்.
அந்த சம்பவத்துக்கு பின் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட ஆண்ட்ரே ரஸ்ஸல், "இந்த மனிதர் உலகில் அதிகம் நேசிக்கப்படும் கிரிக்கெட் வீரர் என்று நான் நினைக்கிறேன்" எனக் கூறி தோனி சேப்பாக்கம் மைதானத்தில் பேட்டிங் செய்ய வரும் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.
2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை ஐந்து போட்டிகளில் ஆடி உள்ளது. அதில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று இருக்கிறது. புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது சிஎஸ்கே அணி. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நான்கு போட்டிகளில் ஆடி மூன்று வெற்றிகளை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.