சென்னை : 2024 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பங்கேற்க இருக்கிறார். இதுவே அவரது கடைசி ஐபிஎல் தொடர் என பலரும் கூறி வருகின்றனர்.
சுமார் 16 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் பங்கேற்று வரும் தோனி இதுவரை பல சாதனைகளை படைத்தது இருந்தாலும் தனது கடைசி ஐபிஎல் தொடரில் ஐந்து மைல்கல் சாதனைகளை அவர் எட்ட அதிக வாய்ப்பு உள்ளது.

அதில் முக்கியமானது ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் தொடரை சேர்த்து சிஎஸ்கே அணிக்காக 5000 ரன்கள் குவித்த வீரர் என்ற மைல்கல்லை எட்ட இருக்கிறார் தோனி. தற்போது தோனி 244 போட்டிகளில் ஆடி 4957 ரன்கள் குவித்துள்ளார். இன்னும் 43 ரன்கள் சேர்க்கும் பட்சத்தில் 5000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டுவார்.
அதே போல சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் லீக் தொடரை சேர்த்து இதுவரை 244 போட்டிகளில் ஆடி இருக்கிறார் தோனி. 2024 ஐபிஎல் தொடரில் 6 போட்டிகளில் ஆடினால், சிஎஸ்கே அணிக்காக 250 போட்டிகளில் ஆடிய முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார் தோனி.
சிக்ஸர் மன்னனான தோனி இன்னும் 11 சிக்ஸ் அடிக்கும் பட்சத்தில் ஐபிஎல் தொடரில் 250 சிக்ஸர்கள் அடித்த நான்காவது வீரர் என்ற பெருமையை பெறுவார். முன்னதாக கிறிஸ் கெயில் (357 சிக்ஸ்), ரோஹித் சர்மா (257 சிக்ஸ்) மற்றும் ஏபி டிவில்லியர்ஸ் (251 சிக்ஸ்) அடித்து அதிக சிக்ஸ் அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.
தோனியின் ஐபிஎல் கோட்டையான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்னும் 55 ரன்கள் சேர்த்தால், அந்த மைதானத்தில் மட்டும் 1500 ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை படைப்பார் தோனி. சென்னையில் 62 போட்டிகளில் 55 இன்னிங்க்ஸ் பேட்டிங் செய்து 1445 ரன்கள் குவித்துள்ளார் தோனி. அதன் சராசரி 42.50 ஆகும். ஸ்ட்ரைக் ரேட் 145.52 ஆகும்.
சிறந்த விக்கெட் கீப்பரான தோனி இன்னும் 20 விக்கெட் வீழ்ச்சியை ஏற்படுத்தினால் ஐபிஎல் தொடரில் 200 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமான முதல் விக்கெட் கீப்பர் என்ற இமாலய சாதனையை படைப்பார்.