விசாகப்பட்டினம் : தனது கடைசி ஐபிஎல் தொடரில் ஆடும் தோனி 2024 ஐபிஎல் தொடரில் முதன் முறையாக பேட்டிங் செய்தார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி 3 ஓவர்களில் பேட்டிங் செய்த தோனி 16 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார். இந்தப் போட்டியில் ஆடிய இரு அணி பேட்ஸ்மேன்களிலேயே மிக அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்து இருந்தார் தோனி.
இந்தப் போட்டியின் போது ஆசிய அளவில் டி20 போட்டிகளில் 7000 ரன்கள் குவித்த முதல் விக்கெட் கீப்பர் என்ற சாதனையை செய்தார் தோனி. அது மட்டுமின்றி ஐபிஎல் வரலாற்றிலேயே 5000 ரன்கள் என்ற மைல்கல்லை முதன் முதலாக கடந்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் செய்தார் தோனி.

அதே போல ஐபிஎல் தொடரில் 19 மற்றும் 20வது ஓவர்களில் மட்டும் 100 சிக்ஸ் அடித்த முதல் வீரர் என்ற பிரம்மாண்ட சாதனையை செய்தார் தோனி. இந்த சாதனைப் பட்டியலில் தோனிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் கீரான் பொல்லார்ட் 19 மற்றும் 20வது ஓவர்களில் 57 சிக்ஸர்கள் மட்டுமே அடித்து இருக்கிறார்.
அதே போல ஐபிஎல் போட்டிகளில் 20வது ஓவரில் 20 ரன்களுக்கும் அதிகமாக அடித்த வீரர்கள் பட்டியலில் தோனி முதல் இடத்தில் இருக்கிறார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 20வது ஓவரில் இரண்டு ஃபோர், இரண்டு சிக்ஸ் அடித்தார் தோனி. அதன் மூலம் 20 ரன்கள் சேர்த்தார்.
ஆறாவது முறையாக 20வது ஓவரில் 20 ரன்களுக்கும் மேல் சேர்த்து இருந்தார் தோனி. இந்த சாதனையை செய்த வீரர்கள் பட்டியலில் தோனிக்கு அடுத்த இடத்தில் இருக்கும் ரோஹித் சர்மா, மார்கஸ் ஸ்டோனிஸ், எபி டிவில்லியர்ஸ் ஆகியோர் மூன்று முறை மட்டுமே இதை செய்துள்ளனர். தோனி ஆறு முறை 20வது ஓவரில் 20 ரன்கள் குவித்துள்ளார்.
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த போதும் தோனி ஆடிய அதிரடி ஆட்டத்தால் சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர்.