சென்னை : 2024 ஐபிஎல் தொடரில் பங்கேற்க சென்னை வந்து இறங்கினார் தோனி. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாமில் அவர் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர் சென்னைக்கு வந்ததே பெரிய கொண்டாட்டமாக மாறி இருக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒருபடி மேலே போய் பில்டப் கொடுத்துள்ளது. நடிகர் விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தின் காட்சி ஒன்றை மறு உருவாக்கம் செய்து, தோனிக்கு பில்டப் கொடுத்து இருக்கிறார்கள். அந்த வீடியோ ரசிகர்களை ஈர்த்துள்ளது. அதிக அளவில் தோனி ரசிகர்கள் அந்த வீடியோவை லைக் செய்து வருகின்றனர்.

லியோ என்பதே சென்னை சூப்பர் கிங்ஸின் அடையாளமாக நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வரும் சொல் தான். லியோ என்றால் சிங்கம் என்ற அர்த்தம் இருப்பதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சின்னமான சிங்கத்தை குறிப்பிடும் வகையில் லியோ என்ற வார்த்தையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சமூக ஊடகப் பக்கங்களில் பயன்படுத்தி வருகிறது. குறிப்பாக தோனிக்கு லியோ என்ற அடைமொழியும் கொடுத்து அவ்வப்போது பதிவுகளை வெளியிடும்.
தற்போது லியோ என்ற பெயரில் திரைப்படம் வெளியான நிலையில் அந்தப் படத்தில் யார் லியோ என்ற உண்மை வெளியாகும் காட்சியை மறு உருவாக்கம் செய்து இருக்கிறது சிஎஸ்கே அணி. அந்த வீடியோவில் ஒருவர் தோனி புகைப்படத்தை மொபைலில் படம் பிடித்து எடுத்துக் கொண்டு ஓடி வருகிறார். பின்னர் சிங்கம் போன்ற உடை அணிந்து இருக்கும் நபர், பழைய புகைப்படம் ஒன்றை எடுத்து அதன் அழுக்கான கண்ணாடியை உடைத்து பார்க்கும் போது அதில் பழைய தோனி புகைப்படம் உள்ளது.
தற்போது தோனி முடி வளர்த்துக் கொண்டு இருக்கும் நிலையில் அந்த பழைய புகைப்படத்தில் முடியை வரைந்து இப்போது வந்திருப்பவர் அதே பழைய தோனி தானா? என பார்க்கும் வகையில் அந்த வீடியோ உள்ளது. தோனி ரசிகர்களுக்கு இந்த காட்சி மெய் சிலிர்க்கும் வகையில் இருப்பதால் சமூக ஊடகங்களில் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். சிஎஸ்கே-வின் ஆட்டம் ஐபிஎல் தொடருக்கு இன்னும் மூன்று வாரங்கள் இருக்கும் நிலையிலேயே துவங்கி விட்டது.