இளம் வீரருக்காக தோனி செய்த செயல்.. மிரண்ட அம்பயர்.. ஐபிஎல் வரலாற்றிலேயே இப்படி சம்பவம் நடந்ததில்லை
சென்னை : 2023ஆம் ஆண்டு நடந்த மறக்க முடியாத கிரிக்கெட் சம்பவங்களில் ஒன்று ஐபிஎல் தொடரின் தகுதிப் போட்டியில் நடந்தது.
அந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, தன் அணியின் இளம் பந்துவீச்சாளர் பதிரானாவுக்காக அம்பயர்களிடம் வாதாடியது கிரிக்கெட் அரங்கில் பரபரப்பை கிளப்பியது.

2023 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இலங்கை அணியின் இளம் வேகப் பந்துவீச்சாளர் மதீஷா பதிரானாவை முதன்மை பந்துவீச்சாளராக வைத்து எதிரணிகளை வீழ்த்தி வந்தது. கேப்டன் தோனி அந்த இளம் வீரரை தனிப்பட்ட முறையில் சிரத்தை எடுத்து பட்டை தீட்டினார். வழக்கம் போல சிஎஸ்கே அணி பிளே-ஆஃப் கூட போகாது என முதலில் கூறப்பட்ட நிலையில் கேப்டன் தோனி அணியை பிளே-ஆஃப் வரை அழைத்து வந்தார்.
அந்த சுற்றின் முதல் தகுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 172 ரன்கள் குவித்தது. அடுத்து குஜராத் டைட்டன்ஸ் அணி சேஸிங் செய்த போது, பதிரானா எட்டு நிமிடங்கள் மைதானத்தை விட்டு வெளியே சென்று விட்டு, மீண்டும் உள்ளே வந்தார்.
அவர் உள்ளே வந்த நான்கு நிமிடங்களில் 16வது ஓவரை வீச பதிரானாவை அழைத்தார் கேப்டன் தோனி. ஆனால், அம்பயர்கள் அவர் பந்து வீச முடியாது எனக் கூறினர். விதிப்படி ஒரு வீரர் எத்தனை நிமிடம் களத்தை விட்டு வெளியே சென்றாரோ, அத்தனை நிமிடம் அவர் மீண்டும் பந்து வீசக் கூடாது. அதன் படி இன்னும் நான்கு நிமிடங்கள் கழித்தே பதிரானா பந்து வீச வேண்டும் என அம்பயர்கள் கூறினர்.
ஆனால், தோனி பதிரானா அந்த ஓவரை வீசினால் தான் போட்டி சிஎஸ்கே அணிக்கு சாதகமாக இருக்கும் என்ற முடிவில் இருந்தார். அதனால், அம்பயர்களுடன் நான்கு நிமிடங்களும் இதுபற்றி வாக்குவாதம் செய்து நேரத்தை கடத்தி விட்டு, பின் எட்டு நிமிடங்கள் கடந்ததால் பதிரானாவை பந்து வீச வைத்தார். விதிப்படி எட்டு நிமிடங்கள் ஆகி விட்டதால் அம்பயர்கள் அதை ஒப்புக் கொண்டனர்.
ஆனால், சிஎஸ்கே அணி குறிப்பிட்ட நேரத்துக்குள் ஓவர்களை வீச முடியாமல் போனது. அதனால், கடைசி ஓவரின் போது உள் வட்டத்துக்குள் ஐந்து ஃபீல்டர்கள் நிற்க வேண்டிய நிலை வந்தது. ஆனால், அதை விட பதிரானா 16வது ஓவர் வீசுவது தான் முக்கியம் என தோனி முடிவு எடுத்து, அந்த நான்கு நிமிடங்களை அம்பயர்களை வைத்தே கடத்தினார்.
அம்பயர்களுக்கு "பல்பு கொடுத்த" சம்பவமாக இது பின்னர் ரசிகர்களால் கேலி, கிண்டல் செய்யப்பட்டது. சிலர் தோனி செய்தது தவறு எனக் கூறினாலும், அவர் செய்தது விதிப்படி தவறு ஆகாது என்பதால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications