கலங்கும் ரசிகர்கள்.. தோனியுடன் இனி இந்த 2 ஜாம்பவான்களும் கேப்டன் இல்லை.. ஐபிஎல் மாறிப் போச்சு
சென்னை : 2024 ஐபிஎல் தொடர் நாளை தொடங்க இருக்கும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகி இருக்கிறார். தோனி ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஆனால், தோனி மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் சோகத்தில் உள்ளனர். அதற்கு காரணம், ஐபிஎல் தொடரில் இதுவரை கேப்டன்களாக இருந்த மூன்று இந்திய ஜாம்பவான்கள் இனி கேப்டனாக செயல்படப் போவதில்லை.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி 2021 ஐபிஎல் தொடருடன் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதே போல, ரோஹித் சர்மா இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐந்த கோப்பைகள் பெற்றுக் கொடுத்த ரோஹித் சர்மா, அந்த அணியின் கேப்டனாக பத்து ஆண்டுகள் பதவி வகித்தார். இவர்கள் இருவருக்கும் முன்பு இருந்தே சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்த தோனி, 2008 முதல் 2023 வரை கேப்டனாக இருந்த நிலையில் தற்போது பதவி விலகி இருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட்டின் முகங்களாக அறியப்படும் தோனி, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரிலும் பெரும் ரசிகர் கூட்டத்தை சேர்த்து வைத்திருந்தனர்.
ஐபிஎல் அணிகளில் அதிக ரசிகர்களை கொண்ட முதல் மூன்று அணிகள் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் தான். அதற்கு காரணம், இந்த மூன்று ஜாம்பவான்களும் தான். இப்போது இவர்கள் மூவரும் இனி கேப்டன்களாக இருக்கப் போவதில்லை என்பதை ஏற்க கடினமாக இருப்பதாகக் கூறி ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் உணர்ச்சிப் பெருக்கை, நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications