சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி 2023 ஐபிஎல் தொடர் முடிந்த உடன் அந்த அணியின் வேகப் பந்துவீச்சாளர் மகீஷ் தீக்ஷனாவிடம் அடுத்த ஐபிஎல் தொடரில் உனக்கு பந்துவீச வாய்ப்பு இல்லை எனக் கூறி இருக்கிறார். அது குறித்து தீக்ஷனா சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
2021 முதல் இலங்கை அணியில் இடம் பெற்று வந்தார் இளம் வேகப் பந்துவீச்சாளர் மகீஷ் தீக்ஷனா. அவரது பந்துவீச்சு லசித் மலிங்காவின் பந்துவீச்சு போன்று இருந்ததை அடுத்து அவரை 2022 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் வாங்கியது. அப்போது வரை தீக்ஷனா பந்துவீச்சில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கவில்லை. ஆனால், அவரை பட்டை தீட்டி சிஎஸ்கே அணியில் முக்கிய பந்துவீச்சாளராக பயன்படுத்த முடிவு செய்தார் தோனி.

2022 ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் பங்கேற்று 12 விக்கெட்கள் கைப்பற்றினார் தீக்ஷனா. அடுத்து 2023 ஐபிஎல் தொடரில் 11 விக்கெட்கள் கைப்பற்றினார். அவரை அணியின் முதன்மை வேகப் பந்துவீச்சாளராக வீச வைத்து ஐபிஎல் கோப்பையையும் சிஎஸ்கே அணி கைப்பற்றியது. அதிக அனுபவம் இல்லாத பந்துவீச்சாளரை வைத்து சிஎஸ்கே அணி வென்றது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
அந்த தொடர் முடிந்த உடன் இலங்கை செல்லும் முன் சிஎஸ்கே அணி வீரர்கள் மற்றும் பிற உறுப்பினர்கள் சந்திப்பின் போது கிளம்புவதற்கு முன் தோனியிடம் சொல்லி விட்டு கிளம்பலாம் என தீக்ஷனா சென்றுள்ளார். அப்போது தோனி, அடுத்த சீசனில் உனக்கு பந்துவீச வாய்ப்பு இல்லை எனக் கூறி இருக்கிறார். அதன் பின், பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் செய்வது மட்டும் தான் உனக்கு அடுத்த சீசனில் முக்கிய வேலை எனக் கூறி இருக்கிறார்.
அப்போது தான் தீக்ஷனாவுக்கு தான் செய்த தவறு தெரிய வந்தது. 2023 ஐபிஎல் தொடரில் தீக்ஷனா ஃபீல்டிங்கில் 4 - 5 கேட்ச்களை கோட்டை விட்டார். அப்படி இருந்தும் அவருக்கு அணியில் தொடர்ந்து வாய்ப்பு அளித்தார் தோனி. இந்த நிலையில், அடுத்த சீசனில் தீக்ஷனா ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டும் மற்றும் பேட்டிங் வாய்ப்பு கிடைத்தாலும் ஓரளவு ரன் சேர்க்க வேண்டும் என்பதையே அப்படி கூறி இருக்கிறார் என்பதை புரிந்து கொண்டார் தீக்ஷனா. தற்போது இலங்கை அணியில் முக்கிய பந்துவீச்சாளராக இருக்கிறார். விரைவில் 2024 ஐபிஎல் தொடரில் மீண்டும் சிஎஸ்கே அணியில் இணைந்து விளையாட இருக்கிறார்.