என்னங்க இது.. இளம் வீரர்களை கதி கலங்க வைத்த தோனி STATS.. 42 வயதிலும் உலகின் சிறந்த ஃபினிஷர்
சென்னை : 2024 ஐபிஎல் தொடரில் தோனி அதிரடி ஆட்டத்தால் கலக்கி வரும் நிலையில் அவரது பேட்டிங் குறித்த ஒரு புள்ளி விவரம் இளம் வீரர்களை எல்லாம் திக்கு முக்காட வைத்துள்ளது.
ஐபிஎல் தொடரின் வரலாற்றில் 20வது ஓவரில் அதிக ரன் குவித்த வீரர் தோனி தான். அதிலும் அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் குவித்து இருக்கிறார். இதன் மூலம் டி20 போட்டிகளில் சிறந்த ஃபினிஷர் இன்று வரை தோனி தான் என்பது நிரூபணமாகி உள்ளது.

தோனிக்கு 42 வயதாகி விட்டது. மேலும், கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் அவரால் சரியாக பேட்டிங் செய்ய முடியவில்லை. இதே கால கட்டத்தில் இந்தியாவிலேயே பல இளம் வீரர்கள் அதிரடி பேட்ஸ்மேன்களாக உருவாகி இருந்தனர். சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா, இந்த ஐபிஎல் தொடரில் அசுதோஷ் சர்மா, அபிஷேக் சர்மா, ஷஷாங் சிங் என இனி இளம் வீரர்கள் தான் டி20யை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லப் போகிறார்கள் என பலரும் நினைத்த நிலையில் நான் இன்னும் என் ஆட்டத்தை முடிக்கவில்லை என அறிவித்துக் கொண்டு களமிறங்கி இருக்கிறார் தோனி.
இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை ஐந்து போட்டிகளில் பேட்டிங் செய்த தோனி அதில் 37 (16 பந்துகள்), 1, 1, 20 (4 பந்துகள்), 28 (9 பந்துகள்) என ரன் குவித்து இருக்கிறார். இதில் மூன்று முறை கடைசி ஓவர்களில் அவர் பேட்டிங் செய்தார். அதிலும் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கடைசி ஓவரின் கடைசி நான்கு பந்துகளில் மட்டுமே பேட்டிங் செய்த தோனி மூன்று சிக்ஸ் அடித்து 4 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்தார்.
2024 ஐபிஎல் தொடரில் இதுவரை 20வது ஓவரில் மட்டும் 16 பந்துகளை சந்தித்து 57 ரன்கள் குவித்து இருக்கிறார். இதில் 4 ஃபோர், 6 சிக்ஸ் அடங்கும். ஒட்டுமொத்தமாக 2024 ஐபிஎல் தொடரில் 34 பந்துகளில் 87 ரன்கள் குவித்து இருக்கிறார்.
மேலும், ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 20வது ஓவர்களில் மட்டும் 313 பந்துகளில் 772 ரன்கள் குவித்து இருக்கிறார் தோனி. அதன் ஸ்ட்ரைக் ரேட் 246 ஆகும். மேலும், 20வது ஓவரில் 65 சிக்ஸ் அடித்து இருக்கிறார். இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஆண்ட்ரே ரஸ்ஸல் 33 சிக்ஸ் மட்டுமே அடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications