அகமதாபாத் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி தற்போது தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில், முன்னாள் சாம்பியன் குஜராத் அணியை எதிர்கொண்டது.
இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியா தான் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக அறிமுகமானார். ஐந்து கோப்பைகளை வென்று கொடுத்த ரோகித் சர்மா ஒரு சாதாரண வீரராக தான் இந்த போட்டியில் களமிறங்கினார்.

இந்த நிலையில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா, எப்போதுமே பவுலர்களுக்கு ஒரு நல்ல துணையாக இருப்பார். அனுபவம் மிக்க வீரராக இருக்கும் ரோகித் சர்மா பௌலர்களிடம் தன்னுடைய அறிவுரையை கூறி எப்படி பந்து வீச வேண்டும் என்று கூறுவார்.
ரோகித் சர்மா கேப்டன் ஆக இருந்தவரை, அவருக்கு மரியாதை கிடைத்தது. ஆனால் இன்று நடைபெற்ற போட்டியில் ரோகித் சர்மாவை வெளிநாட்டு வீரரான லுக் வுட் அவமரியாதை செய்து விட்டதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆட்டத்தின் 1.3 வது ஓவரில் லுக் வுட் பந்து வீசிக் கொண்டு இருந்தார். அப்போது சாகாவுக்கு எப்படி பந்து வீச வேண்டும் என்று சொல்வதற்காக ரோகித் சர்மா அங்கிருந்து ஓடி வந்து வுட்டிடம் பேச வந்தார்.
ஆனால் வுட் ரோகித் சர்மாவை கண்டுகொள்ளாமல் அப்படியே சென்று விட்டார். இதனை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத ரோகித் சர்மா, அவமானத்தை வெளியே காட்டிக் கொள்ளாத வகையில் சொல்ல வந்ததை சொல்லாமல் கைதட்டி விட்டு சாதாரணமாக சென்றுவிட்டார். இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.
ரோகித் சர்மா போன்ற சீனியரை எப்படி ஒரு இளம் தீரர் அவமானப்படுத்தலாம் என்று மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். ஐந்து முறை கோப்பையை வென்று கொடுத்த ரோகித் சர்மாவை அவமரியாதை செய்யும் விதமாக மும்பை இந்தியன்ஸ் அணி நடத்துவதை இதற்கு காரணம் என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் சிலர், கேப்டனாக இருக்கும் வரை ரோகித் சர்மாவை மதித்த வீரர்கள் தற்போது அந்த பதவியில் அவர் இல்லாததால் அவரை மதிப்பதில்லை என்று தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இருப்பினும் ரோகித் சர்மா இதனை எல்லாம் மனதில் போட்டுக் கொள்ளாமல் தன்னுடைய வேலையை களத்தில் சரியாக செய்து வந்தார்.