மும்பை இந்தியன்ஸ் அணியில் பும்ராவுக்கு என்ன நடந்தது? அதிருப்தியில் வெளியிட்ட அந்த பதிவு
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியால் ஐபிஎல் தொடரில் அறிமுகம் செய்யப்பட்டு, இன்று கிரிக்கெட் உலகில் மிகப் பெரும் வேகப் பந்துவீச்சாளராக அறியப்படும் பும்ரா அதே அணியால் அடுத்த கேப்டன் என வாக்குறுதி அளிக்கப்பட்டு, தற்போது ஏமாற்றப்பட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை 2024 ஐபிஎல் தொடருக்கான கேப்டனாக அறிவித்து இருக்கிறது. பத்து ஆண்டுகள் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா நீக்கப்பட்டார். இந்த மாற்றம் குறித்து ரோஹித் சர்மா இதுவரை ஒரு வார்த்தை கூட கூறவில்லை. மறுபுறம், மும்பை இந்தியன்ஸ் அணியின் அடுத்த கேப்டனாக பலராலும் கூறப்பட்ட பும்ராவும் அதிருப்தியில் இருப்பதாக கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் அடுத்த கேப்டனாக பும்ரா ஆவார் என அணி நிர்வாகம் ஒரு திட்டம் வைத்து இருந்ததாகவும், அதற்கு பும்ராவும் தன்னை தயார் செய்து வந்ததாகவும் கடந்த ஓராண்டாகவே கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், தற்போது அவரது கேப்டன் வாய்ப்பு ஹர்திக் பாண்டியாவுக்கு சென்றுள்ளது. அதனால், பும்ரா ஏமாற்றப்பட்டார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். பும்ராவும் கூட இது குறித்து ஒரு சூசகமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை, மும்பை இந்தியன்ஸ் அணி தங்கள் அணிக்கு அழைத்து வந்தது. அதன் பின் பும்ரா தன் இன்ஸ்டாகிராமில் சூசகமான ஸ்டேட்டஸ் ஒன்றை வைத்தார். அதில், "சில சமயம் அமைதியாக இருப்பதே சிறந்த பதில்" என கூறி இருந்தார்.
அவர் அப்படி ஒரு பதிவை வெளியிட காரணம் என்ன என்பது குறித்தும் ஒரு தகவல் வலம் வந்தது. ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டனாக ஆக்கப் போகிறது என அப்போதே அவருக்கு தெரிந்து விட்டது. பும்ராவிடம் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் இதை தெரிவித்து இருக்கலாம். அதில் தனக்கு விருப்பம் இல்லை என்பதை வெளிக்காட்டவே பும்ரா அப்படி ஒரு சூசகமான பதிவை வெளியிட்டு இருக்கிறார் என கூறப்பட்டது. தற்போது அந்த விஷயம் உண்மையாக மாறி இருக்கிறது. இது குறித்து பும்ரா பேசினால் இன்னும் பல விஷயம் வெளிச்சத்துக்கு வரலாம்.


Click it and Unblock the Notifications