மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பிசிசிஐ வைத்த ஆப்பு.. சூர்யகுமார் யாதவ் ஆடுவதில் சிக்கல்
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரரும், உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனுமான சூர்யகுமார் யாதவ் 2024 ஐபிஎல் தொடரில் ஆடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
கடந்த 2023 டிசம்பர் முதல் சூர்யகுமார் யாதவ் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரின் கடைசிப் போட்டியில் சூர்யகுமார் யாதவுக்கு கணுக்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அதற்காக அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை எடுத்து மீண்டு வந்த போது, அவருக்கு குடலிறக்கம் இருப்பது கண்டறியப்பட்டு அதற்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டார் சூர்யகுமார் யாதவ்.

இந்த இரண்டு உடல் நலப் பிரச்சனைகளில் இருந்து மீண்டு வந்த சூர்யகுமார் யாதவ் தற்போது உடற்தகுதியை மேம்படுத்த வேண்டி மீண்டும் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று இருக்கிறார். அங்கே அவருக்கு நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனைகளின் அடிப்படையில் அவர் இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு பயிற்சி செய்து உடற் திறனை மேம்படுத்த வேண்டும் என கூறப்பட்டு இருக்கிறது.
இதன் காரணமாக அவர் 2024 ஐபிஎல் தொடரின் முதல் வாரத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைய முடியாத நிலையில் இருக்கிறார். 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கு சூர்யகுமார் யாதவ் மிகவும் முக்கியமான வீரர் என்பதால் பிசிசிஐ அவரை அவசர கதியில் ஐபிஎல் தொடரில் ஆட வைக்க விரும்பவில்லை எனவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
எனவே, சூர்யகுமார் யாதவ் மேலும் சில வாரங்கள் கழித்து தாமதமாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இணையவும் வாய்ப்பு உள்ளது. இது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாகும். சூர்யகுமார் யாதவ் உடற்தகுதி பெற்றாலும் அவரது ஃபார்ம் குறித்த கேள்விகளும் எழுந்துள்ளன. அவர் மீண்டும் அதே பழைய ஃபார்மில் அதிரடி ஆட்டம் ஆடும் அளவுக்கு தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications