சென்னை : ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு கேப்பை கைப்பற்றுவதன் மூலமாக மட்டும் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாது என்று சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு மீண்டும் விராட் கோலியை வம்புக்கு இழுத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் விளாசியதன் மூலமாக ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஆரஞ்சு கேப்பை வென்றுள்ளார். இந்த சீசனில் 15 போட்டிகளில் விளையாடிய விராட் கோலி ஒரு சதம், 5 அரைசதம் உட்பட 741 ரன்களை விளாசியுள்ளார். இவருக்கு பின் 2வது இடத்தில் சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 583 ரன்களை விளாசி இருக்கிறார்.

முதலிடத்திற்கும், 2வது இடத்திற்கும் இடையில் மட்டும் சுமார் 150 ரன்கள் வித்தியாசம் உள்ளது. இதன் மூலமாகவே விராட் கோலியின் ஆதிக்கத்தை புரிந்து கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் 2016ஆம் ஆண்டுக்கு பின் மீண்டும் ஆரஞ்சு கேப்பை வென்றதால், 2 முறை ஆரஞ்சு கேப்பை வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு ஆரஞ்சு கேப் குறித்து பேசுகையில், 3வது முறையாக கோப்பையை வென்ற கேகேஆர் அணிக்கு வாழ்த்துகள். அந்த அணியின் நட்சத்திர வீரர்களான சுனில் நரைன், ரஸ்ஸல் மற்றும் மிட்சல் ஸ்டார்க் உள்ளிட்ட அனைவரும் கேகேஆர் அணியின் வெற்றியில் பங்களித்துள்ளனர். அனைவரின் பங்களிப்பும் இருந்தால் தான் ஒரு அணியால் கோப்பையை வெல்ல முடியும்.
ஐபிஎல் தொடரில் இதுபோல் பலமுறை பார்த்திருக்கிறோம். அதிக ரன்களை விளாசி ஆரஞ்சு கேப்பை வெல்வதால் மட்டுமே ஐபிஎல் தொடரை வென்றிட முடியாது. மற்ற வீரர்களும் 300 ரன்கள், 400 ரன்களை சேர்க்க சேர்க்க வேண்டும். ஆர்சிபி அணியில் விராட் கோலி நிச்சயம் ஜாம்பவான் அந்தஸ்தில் இருக்கும் வீரர் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் விராட் கோலியின் தரம், மற்ற இளம் வீரர்களுக்கு அழுத்தத்தை கொடுக்கும்.
அதனால் விராட் கோலி சற்று நிதானம் காக்க வேண்டும். அப்போது தான் இளம் வீரர்களால் நல்ல மனநிலையில் விளையாட முடியும் என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே அம்பத்தி ராயுடு மற்றும் ஆர்சிபி ரசிகர்களிடையே காரசாரமாக கருத்து மோதல் நடந்து வரும் நிலையில், ஆரஞ்சு கேப் விவகாரம் மீண்டும் சோசியல் மீடியாவில் புயலை கிளப்பியுள்ளது.