முல்லன்பூர் : பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.
ஐபிஎல் தொடரின் 37வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாடியது. ஏற்கனவே இந்த இரு அணிகள் மோதிய போட்டியில் குஜராத் அணியை அதன் சொந்த மண்ணில் பஞ்சாப் வீழ்த்தியது. இதனால் குஜராத் அணி பதிலடி கொடுக்க தீவிரமாக இருந்தது. இதன்பின் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 142 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. தமிழக வீரர் சாய் கிஷோர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பின் குஜராத் அணி தரப்பில் சுப்மன் கில் - சாஹா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இவர்கள் இருவரும் தொடக்கம் முதலே நிதானம் காட்டிய நிலையில், அர்ஷ்தீப் சிங் பவுலிங்கில் சாஹா 13 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து சாய் சுதர்சன் - சுப்மன் கில் கூட்டணி இணைந்தது. இவர்கள் இருவரும் இணைந்து பவர் பிளே ஓவர்கள் முடிவில் குஜராத் அணியின் ஸ்கோரை 44 ரன்களாக உயர்த்தினர். இதன்பின் உடனடியாக ஸ்பின்னர்களை அட்டாக்கில் கொண்டு வந்தார் சாம் கரண்.
இருப்பினும் இருவருமே எந்த அவசரமும் காட்டாமல் நிதானமாக விளையாட, லிவிங்ஸ்டனை அட்டாக் செய்ய முயன்று சுப்மன் கில் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த மில்லரும் 4 ரன்களில் ஆட்டமிழக்க, சாய் சுதர்சன் 31 ரன்களில் வெளியேறினார். இதனால் 15 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 101 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. பின்னர் வந்த ஒமர்சாய் 13 ரன்களில் ஆட்டமிழக்க, ராகுல் டிவாட்டியா - ஷாரூக் கான் கூட்டணி இணைந்தது.
ஹர்ப்ரீத் பராப் வீசிய 17வது ஓவரிலேயே 2 பவுண்டரிகள் உட்பட 13 ரன்களை டிவாட்டியா விளாச, குஜராத் அணியின் வெற்றிக்கு 18 பந்துகளில் 25 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. அப்போது அட்டாக்கில் வந்த ரபாடா பவுலிங்கில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உட்பட 21 ரச்ன்களை டிவாட்டியா விளாசினார். இதனால் 12 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே வெற்றிக்கு தேவையாக இருந்தது. அப்போது ஹர்சல் படேல் பவுலிங் செய்ய வந்தார்.
அந்த ஓவரின் முதல் பந்திலேயே ஷாரூக் கான் போல்டாகி 8 ரன்களில் வெளியேற, கடைசி பந்தில் ரஷீத் கான் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் குஜராத் வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்டது. அர்ஷ்தீப் சிங் வீசிய கடைசி ஓவரின் முதல் பந்திலேயே ராகுல் டிவாட்டியா பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார். சிறப்பாக ஆடிய ராகுல் டிவாட்டியா 18 பந்துகளில் 36 ரன்களை விளாசி அசத்தினார்.