முல்லன்பூர் : பஞ்சாப் அணியின் இளம் வீரர் அஷுதோஷ் சர்மாவின் ஆட்டத்தால் மிரண்டு போன மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி மைதானத்திலேயே பாராட்டியுள்ளார்.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி 14 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், 77 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது. இதன்பின் வந்த இளம் வீரர் அஷுதோஷ் சர்மா 28 பந்துகளில் 7 சிக்ஸ், 2 ஃபோர்ஸ் உட்பட 68 ரன்களை விளாசி அசத்தினார்.

பவர் பிளே ஓவர்கள் முடிவடைந்த போது மும்பை அணியின் வெற்றி உறுதி என்று பார்க்கப்பட்ட நிலையில், ஒற்றை ஆளாக நின்று அஷுதோஷ் சர்மா மும்பை வீரர்களை மிரள வைத்தார். பும்ராவின் பவுலிங்கிலேயே சிக்சர் அடித்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார் அஷிதோஷ் சர்மா. பஞ்சாப் அணியில் கூடுதலாக ஒரு பேட்ஸ்மேன் அவருக்கு உதவியாக நின்றிருந்தால் நிச்சயம் பஞ்சாப் அணி வெற்றிபெற்றிருக்கும்.
இதனால் ரசிகர்கள் பலரும் அஷுதோஷ் சர்மாவை பாராட்டி வருகின்றனர். இந்த ஐபிஎல் தொடரின் புதிய கண்டுபிடிப்பு அஷுதோஷ் சர்மா தான் என்று நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஃபினிஷ் ரோலில் களமிறங்கும் அஷுதோஷ் சர்மா, விரைவில் இந்திய அணிக்காகவும் அறிமுகமாகுவார் என்று பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
இந்த போட்டிக்கு பின் அஷுதோஷ் சர்மாவை மும்பை அணியின் வீரர்களே தேடி சென்று பாராட்டினர். மும்பை அணியின் பும்ரா, சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மா, கேப்டன் ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட பலரும் நேரில் சென்று பாராட்டினர். அதேபோல் மும்பை அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானியும் நேரில் அழைத்து அஷுதோஷ் சர்மாவை பாராட்டினர்.
மும்பை பயிற்சியாளர்களும் அஷுதோஷ் சர்மாவை பாராட்டியதால், அடுத்த சீசனில் அஷுதோஷ் சர்மா தக்க வைக்கப்படாமல் ஏலத்திற்கு வந்தால், மும்பை அணி வாங்க முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் அஷுதோஷ் சர்மாவின் ஷாட்கள் அனைத்து சூர்யகுமார் யாதவின் ஷாட்களை ஒத்திருப்பதால், ரசிகர்கள் பலரும் அவரை ஜூனியர் சூர்யகுமார் என்றும் பாராட்டி வருகின்றனர்.