IPL 2024 : யாரு சாமி இவன்.. ரிங்கு சிங் இடத்துக்கே வேட்டு வைக்கப் போகும் அதிரடி வீரர் இவர்தான்
முல்லான்பூர் : 2024 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்று இருக்கும் அதிரடி வீரர் அசுதோஷ் சர்மா தொடர்ந்து மூன்று போட்டிகளில் அந்த அணிக்காக கடைசி மூன்று ஓவர்களில் மிக அதிக ரன்களை சேர்த்து இருக்கிறார். இதன் மூலம் இந்திய அணியில் ஃபினிஷராக இடம் பெற்றுள்ள ரிங்கு சிங்கிற்கு போட்டியாளராக மாறி இருக்கிறார் அசுதோஷ் சர்மா.
2024 ஐபிஎல் தொடரின் 27வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி படுமோசமாக பேட்டிங் செய்தது. 16.1 ஓவர்களில் 106 ரன்கள் எடுத்து 6 விக்கெட்களை இழந்தது அந்த அணி. ஒரு ஓவருக்கு 6 ரன்கள் என்ற அளவில் மோசமாக ரன்சேர்த்து இருந்தது.

இந்த நிலையில் இம்பாக்ட் வீரராக அசுதோஷ் சர்மா களமிறக்கப்பட்டார். அவர் 16 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார். இதை அடுத்து 130 ரன்களை மட்டுமே எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட பஞ்சாப் கிங்ஸ் அணி 147 ரன்களை எட்டியது. இந்தப் போட்டியில் கடைசி மூன்று ஓவர்களில் அதிரடி ஆட்டம் ஆடி இருந்தார் அசுதோஷ் சர்மா.
அதன் மூலம், 2024 ஐபிஎல் தொடரில் ஒரு இன்னிங்ஸில் 18 முதல் 20வது ஓவர் வரை பேட்டிங் செய்த வீரர்களில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்து இருக்கிறார் அசுதோஷ் சர்மா. இந்தப் பட்டியலில் தினேஷ் கார்த்திக் முதல் இடத்திலும், ஹென்ரிச் கிளாசன் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
2024 ஐபிஎல் தொடரில் ஒரு இன்னிங்ஸில் 18 முதல் 20வது ஓவர் வரை அதிக ரன் குவித்த வீரர்கள் :
91 (35) - தினேஷ் கார்த்திக் (ஸ்ட்ரைக் ரேட்: 260)
86 (31) - ஹென்ரிச் கிளாசென் (ஸ்ட்ரைக் ரேட்: 277.42)
85 (36) - அசுதோஷ் சர்மா (ஸ்ட்ரைக் ரேட்: 236.11)
75 (39) - நிக்கோலஸ் பூரன் (ஸ்ட்ரைக் ரேட்: 192.31)
73 (41) - ராகுல் டெவைதா (ஸ்ட்ரைக் ரேட்: 178.05)
தொடர்ந்து மூன்று போட்டிகளில் அசுதோஷ் சர்மா கடைசி ஓவர்களில் ஃபினிஷராக சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார். இதன் மூலம் 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய வீரர்கள் தேர்வில் தன் பெயரையும் சேர்த்து இருக்கிறார். ரிங்கு சிங்கிற்கு மாற்று வீரராக அசுதோஷ் சர்மா தேர்வு செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications