கடந்த சீசனில் சிஎஸ்கே நெட் பவுலர்.. இப்போது SRH ஃபினிஷர்.. நிதீஷ் ரெட்டி ரகசியம் உடைத்த ஆகாஷ் சோப்ரா
சென்னை : ஐதராபாத் அணியின் இளம் நட்சத்திர வீரர் நிதீஷ் குமார் ரெட்டி, கடந்த சீசனில் சிஎஸ்கே அணியின் நெட் பவுலராக செயல்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 64 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அதுமட்டுமல்லாமல் கிளாசனும் 9 ரன்களில் வெளியேற, ஐதராபாத் அணி தடுமாறியது. அப்போது இளம் வீரர் நிதீஷ் குமார் ரெட்டி அதிரடியாக அரைசதம் விளாசி அசத்தினார்.

சிறப்பாக விளையாடிய இவர் 37 பந்துகளில் 5 சிக்ஸ், 4 ஃபோர்ஸ் உட்பட 64 ரன்களை விளாசினார். இவரின் அதிரடி காரணமாக ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்கள் குவித்தது. நட்சத்திர வீரர்கள் பெரிதாக சோபிக்காத போதும், இந்திய இளம் வீரர்களின் சிறப்பான செயல்பாடுகளால் ஐதராபாத் அணி சவாலான இலக்கை நிர்ணயிக்க முடிந்து, பவுலர்களால் வெற்றிபெற்றது.
இதனால் நிதீஷ் குமார் ரெட்டிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இதனால் நிதீஷ் குமார் ரெட்டி யார் என்று ரசிகர்கள் பலரும் தேடி வருகின்றனர். இந்த நிலையில் ஆகாஷ் சோப்ரா பேசுகையில், ஐபிஎல் ஏலத்தில் அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு வாங்கப்பட்டவர் நிதீஷ் குமார் ரெட்டி. ஐதராபாத் அணியின் பேட்டிங் அடுத்தடுத்து பின்னடைவை சந்தித்த போது, 150 ரன்கள் எடுப்பதே சந்தேகமாக பார்க்கப்பட்டது. ஆனால் நிதீஷ் குமார் ரெட்டி அசத்திவிட்டார்.
இவர் கடந்த சீசன் வரை சிஎஸ்கே அணியின் நெட் பவுலராக செயல்பட்டவர். கடந்த போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக கடைசி பந்தில் சிக்ஸ் விளாசினார். ஐபிஎல் தொடரின் வரலாற்றில் இந்திய வீரர்களில் ஃபினிஷர் என்று பார்த்தால், விரல்விட்டு எண்ணிவிடலாம். அதன் காரணமாகவே ஃபினிஷர்களுக்கு அதிக தொகை கொடுக்க ஐபிஎல் அணிகள் முன் வருவார்கள். ராகுல் டிவாட்டியா, சிவம் துபே, ஷஷாங்க் சிங், அஷுதோஷ் சர்மா ஆகியோரின் வரிசையில் இப்போது நிதீஷ் குமார் ரெட்டியை சேர்த்து கொள்ளலாம்.
அதேபோல் ஐதராபாத் அணியின் அப்துல் சமாத் சிறப்பாக பேட்டிங் செய்து முக்கிய ரன்களை சேர்த்தார். 180 ரன்கள் என்ற சவாலான இலக்கை எட்ட அவரின் ஆட்டமும் முக்கிய காரணம். மார்க்ரம், ட்ராவிஸ் ஹெட், கிளாசன் ஆகியோர் ரன்கள் சேர்க்காத போதும், இந்திய வீரர்கள் ரன்கள் சேர்த்துள்ளனர் என்று பாராட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications